Published : 16 Dec 2019 11:13 AM
Last Updated : 16 Dec 2019 11:13 AM

ஸ்டாலின் காந்தியும் இல்லை; நான் புத்தனும் இல்லை: அமைச்சர் சண்முகம்

அமைச்சர் சி.வி.சண்முகம் - மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

ஸ்டாலின் காந்தியும் இல்லை, தான் புத்தனும் இல்லை என, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை, பசுமைவழிச் சாலையில் இன்று (டிச.16) செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:

"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடாது என்பதற்காக, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுத்து முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், உச்ச நீதிமன்றம் கடைசியில் தெள்ளத்தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஆனாலும், மீண்டும் தெளிவு வேண்டும் என்று ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் திமுகவுக்குக் குட்டு வைத்தார். தேர்தலைச் சந்திக்க அஞ்சி, மக்களைச் சந்திக்க தைரியம் இல்லாமல், திமுகவும் ஸ்டாலினும் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் ஒரு நோட்டீஸை ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர். அதில், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் நடத்தப்படாவிட்டால், ஆணையத்தின் மீது அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1991 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தேர்தலை நடத்துவதாக, திமுக உச்ச நீதிமன்றத்தில் பொய் சொன்னது. ஆனால், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தான் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகுதான் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவைத் தந்தது.

ஆனால், இப்போதும் திமுக தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறது. நல்ல வழக்கறிஞர்களிடம் இந்த உத்தரவு குறித்து கேட்டு ஸ்டாலின் தெளிவு பெற வேண்டும். தன் தகுதிக்கும் பதவிக்கு ஏற்றாற்போல் ஸ்டாலின் பேச வேண்டும்.

என்னைப் பற்றி தனிப்பட்ட விமர்சனம் செய்கிறார். என்னைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி ஸ்டாலினுக்கு இல்லை. ஸ்டாலின் காந்தியும் இல்லை, நான் புத்தனும் இல்லை. தனிப்பட்ட வழக்கை குறித்துப் பேச வேண்டுமென்றால், ஸ்டாலின் குறித்து இந்த ஆண்டு முழுவதும் பேசலாம். என் பணிகளில் குறைகள் இருந்தால் அதனைச் சுட்டிக் காட்டட்டும்.

ஆனால், நான்கு வார்த்தையை ஒழுங்காகப் பேசத் தெரியாத ஸ்டாலின், நா குழறி என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். தனிப்பட்ட முறையில் பேச வேண்டுமென்றால் அவர் மேடை அமைக்கட்டும். அவர் என்னைக் குறித்துப் பேசட்டும், நான் அவரைப் பற்றிப் பேசுகிறேன். இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன்.

மூன்றாம் தரப் பத்திரிகையான முரசொலியில் என்னைப் பற்றி எழுதுகின்றனர். நான் ஊர், பெயர் தெரியாதவனா? நான் தமிழகத்தின் குடிமகன். ஸ்டாலின் எங்கிருந்து வந்தார்? அவரது தலைவர் எங்கிருந்து வந்தார்? அவரது பூர்வீகம் என்ன? சொல்ல முடியுமா? தைரியம் இருக்கிறதா? நாவடக்கத்துடன் பேச வேண்டும். இதனை மீறிப் பேசினால், அதற்கான பதிலைத் தரத் தயாராக இருக்கிறோம். தைரியம் இருந்தால் என் பெயரைக் குறிப்பிட்டுப் பேசட்டும்".

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x