Published : 16 Dec 2019 10:31 AM
Last Updated : 16 Dec 2019 10:31 AM

எல்பிஜி சிலிண்டர்களை விநியோகம் செய்யும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (டிச.16) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகம் முழுவதும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பணியில் நேரடியாக சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களும் ஈடுபடுகிறார்கள். இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட 3 எண்ணெய் நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர்களை அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர்களிடம் இருந்து பெற்று அதனை வண்டிகளில் கொண்டு சென்று வீடுகளுக்கு சேர்க்கும் பணி கடினமானது.

அதேபோல கடும் வெப்பம், மழை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் உரிய காலத்தில் சிலிண்டரைக் கொண்டு சேர்க்க தொழிலாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் அர்ப்பணிப்பானவை. இப்படி சிலிண்டர்களை வீடுகளுக்கும், கடைகளுக்கும் கொண்டு சேர்க்கும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த சம்பளம் உரிய காலத்தில் கிடைக்க வேண்டும். ஆனால் அரசு நிர்ணயம் செய்த சம்பளம் காலத்தே முழுமையாக கிடைக்கவில்லை என்று தொழிலாளர்கள் வேதனையுடன் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் விநியோகஸ்தர்களில் சில விநியோகஸ்தர்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை முழுமையாக வழங்காததால் சிலிண்டர் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது.

எனவே, அரசு மாநிலம் முழுவதும் உள்ள சிலிண்டர் விநியோகஸ்தர்கள்- தொழிலாளர்களுக்கு உரிய சம்பளத்தை காலத்தே வழங்குகிறார்களா என்பதைக் கண்காணித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் சிலிண்டரைக் கொண்டு செல்லும் போது தொழிலாளர்கள் விபத்தில் சிக்கிக்கொண்டால் அவர்களுக்கான மருத்துவச் செலவை விநியோகஸ்தரே ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.

குறிப்பாக எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் தங்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்க வேண்டும், சம்பளப் பணத்தை காலத்தே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசுக்கு முன் வைக்கிறார்கள். இவையெல்லாம் நியாயமான கோரிக்கைகள். இவர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே சமயம் சிலிண்டர் விநியோகம் செய்வதில் ஏதேனும் முறைகேடுகள் இருப்பின் அதனையும் சரி செய்ய வேண்டிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் சிலிண்டர் திருட்டைத் தடுக்கவும், தொழிலாளர்களுக்கு உரிய விடுப்பு கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

எனவே, சிலிண்டர்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலன் காக்கவும், தொழிலாளர்களை போராட்டக் களத்திற்கு தள்ளாமல் இருக்கவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும் மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x