Published : 16 Dec 2019 09:55 AM
Last Updated : 16 Dec 2019 09:55 AM

காவலர்கள் நீதிபதிகளாக மாறினால் சட்டத்தின் ஆட்சி இருக்காது: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் கருத்து

தூத்துக்குடி

காவலர்கள் நீதிபதிகளாக மாறிவிட்டால் நாட்டில் சட்டத்தின் ஆட்சி இருக்காது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் குடும்பநல நீதிமன்றம், போக்சோ சட்ட சிறப்பு நீதிமன்றம் மற்றும் 4-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகியவற்றின் தொடக்க விழா, ரூ.4.88 கோடியில் கட்டப்பட்ட புதிய நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா, வைகுண்டத்தில் ரூ.5.09 கோடியில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடைபெற்றன.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி என்.லோகேஸ்வரன் வரவேற்றார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாக நீதிபதியுமான வி.பாரதிதாசன் புதிய நீதிமன்றங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:ஏழை, எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கவும், மக்கள் எளிதாக நீதிமன்றங்களை அணுகவும் தாலுகாதோறும் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது குடும்பநல நீதிமன்றங்களுக்கு வழக்குகள் அதிகமாக வருகின்றன. இது வரவேற்கத்தக்கது அல்ல. இருந்தாலும் இந்த வழக்குகளை விரைவாக முடிக்க மாவட்டம்தோறும் குடும்பநல நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி போக்சோ சட்ட சிறப்பு நீதிமன்றமும் மாவட்டம்தோறும் அமைக்கப்பட்டு வருகிறது.

நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாக தேங்கி இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு மறுக்க முடியாத உண்மை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பல நிலைகளில் வழக்குகள் தாமதமாகின்றன. எனவே, நீதிமன்றங்களை மட்டும் குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.

நீதியை பெறுவதற்கு எந்த குறுக்கு வழியும் இல்லை. நீதியை வழங்க நீதிமன்றங்களால்தான் முடியும். அதுதான் சட்டத்தின் ஆட்சி. நமது அரசியல் அமைப்பு சட்டம் கூறுவதும் இதுதான். ஒரு நபர் குற்றவாளியா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரமும், பொறுப்பும் நீதிமன்றங்களுக்குதான் உள்ளது.

குற்றவாளியாக இருந்தால் அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பதை முடிவு செய்யும் பொறுப்பு நீதிமன்றங்களிடம் தான் உள்ளது. காவல் நிலையங்கள் நீதிமன்றங்களாகவும், காவலர்கள் நீதிபதிகளாகவும் மாறிவிடக்கூடாது. அப்படி மாறிவிட்டால் இங்கே சட்டத்தின் ஆட்சி இருக்காது. வழக்கறிஞர்களை கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்துதான் மக்கள் வழக்குகளை ஒப்படைக்கின்றனர். இதை மனதில் வைத்து வழக்குகளை வழக்கறிஞர்கள் கையாள வேண்டும் என்றார்.

விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பங்கேற்றனர். மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி எஸ்.ஹேமா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x