Published : 16 Dec 2019 09:45 AM
Last Updated : 16 Dec 2019 09:45 AM

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் 26 யானைகளுடன் நலவாழ்வு முகாம் தொடக்கம்: ஓராண்டுக்கு பிறகு தோழிகளைக் கண்டதால் குதூகலம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நேற்று தொடங்கியது. ஓராண்டுக்குப் பின் தோழிகளைக் கண்ட யானைகள், மகிழ்ச்சியுடன் பிளிறி குதூகலித்தன.

தொடக்கத்தில் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் நடைபெற்று வந்த இந்த முகாம், 2012-ம் ஆண்டு முதல் தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 8-வது ஆண்டாக நேற்று காலை இந்த முகாம் தொடங்கியது. மொத்தம் 48 நாள் நடைபெற உள்ள முகாமில், 26 யானைகள் மற்றும் அதன் பாகன்கள் தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க விழாவையொட்டி, 26 யானைகளும் குளிக்கவைக்கப்பட்டு, சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன.

ரூ.1.40 கோடி நிதி ஒதுக்கீடு

கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானைகளுக்குப் பிடித்தமான கரும்பு, பழங்கள், பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டன. அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி முகாமைத் தொடங்கி வைத்தார். இன்னும் 2 யானைகள் இன்றோ அல்லது நாளையோ வந்துசேரும் என்றும், முகாமுக்காக அரசு ரூ.1.40 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தொடக்க விழாவில், அறநிலையத் துறை தலைமையிடத்து இணை ஆணையர் மங்கையர்க்கரசி, கோவை இணை ஆணையர் ராஜமாணிக்கம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். யானைகளின் உடல் நலனைக் கருத்தில்கொண்டு, கால்நடை மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி யானைகள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், ஷவர் பாத் மூலம் குளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உணவும், மருந்துகளும்

இங்கு யானைகளுக்கு கரும்பு, கூந்தப்பனை, தென்னை மட்டை, புற்கள், கரும்பு சோகை, பலா இலை, சோளத்தட்டு, மூங்கில், கீரை வகைகள், அரிசி, பச்சைப் பயிறு, கொள்ளு, உப்பு, மஞ்சள், அஷ்ட சூரணம், சத்து மாத்திரைகள், பேரீச்சம்பழம், அவல், கேரட், பீட்ரூட், லேகியங்கள் ஆகியவை தினமும் வழங்கப்பட உள்ளன. முகாமைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக சூரிய மின் வேலி மற்றும் தொங்கும் மின் வேலிகள், ராட்சத விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

யானைகளின் இயல்புக்கு மாறாக, கோயில்களில் மனிதர்கள் சூழ வளர்க்கப்படுவதால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவற்றுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நீக்கி, அவை புத்துணர்வு பெற வேண்டுமென்பதற்காக வனம் சார்ந்த பகுதியில் இம்முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

முகாமுக்குள் நுழைந்தவுடன், தங்களது தோழிகளைக் கண்ட மகிழ்ச்சியில் யானைகள் ஒன்றுக்கொன்று கொஞ்சி மகிழ்ந்தன. சங்கரன் கோயில் யானையான கோமதி, மௌத்ஹாரன் வாசித்ததுடன், கால்பந்தும் விளையாடி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்தாலும், அவற்றுக்கான அபார நினைவாற்றலால், தங்களது தோழிகளை யானைகள் இனம் கண்டுகொள்வதாக கூறும் பாகன்கள், ‘‘எங்களது யானைகள் மட்டுமல்ல, நாங்களும், சக பாகன்களை முகாம் மூலம் ஆண்டுக்கொருமுறை சந்திப்பதாலும், 48 நாட்கள் ஒன்றாக தங்குவதாலும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x