Published : 16 Dec 2019 09:36 AM
Last Updated : 16 Dec 2019 09:36 AM

சுங்கச்சாவடிகளில் இருமார்க்கங்களிலும் தலா 2 பாதைகளில் பணம் செலுத்தி பயணிக்கலாம்; பாஸ்டேக் அட்டை பெற ஜன.14-ம் தேதி வரை அவகாசம்: தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் உள்ள மொத்த பாதைகளில் 25 சதவீத பாதைகளில் அதாவது இரு மார்க்கங்களிலும் தலா 2 பாதைகள்ில் வரும் ஜனவரி 14-ம் தேதி வரை (30 நாள்) ‘பாஸ்டேக் அட்டை’ விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேசியநெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘பாஸ்டேக்' (FASTag) முறையை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கொண்டுவந்தது. இதன்படி, ஆர்எப்ஐடி (RFID - Radio-frequency Identification) சார்ந்த ‘பாஸ்டேக்' கார்டு வாகனத்தின் விண்டுஷீல்டில் ஒட்டப்படுகின்றன. சுங்கச்சாவடிகளில் இந்த பாஸ்டேக் அட்டை வழங்கப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஆர்.சி, புகைப்படம், அடையாள அட்டை வழங்கி பெற்றுக் கொள்ளலாம். வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் மாறும். குறிப்பாக காருக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். இதில், ரூ.250 திரும்பப்பெறும் வைப்பு தொகை, பாஸ்டேக் அட்டை கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது.

இதற்கிடையே, வாகன ஓட்டிகளின் வசதிக்காக பாஸ்டேக் அட்டையில் கட்டணம் வசூலிக்கும் முறை டிசம்பர் 15-ம் தேதி முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், இதற்கான பணிகள் சுங்கச்சாவடிகளில் முழுமையான நடைபெறவில்லை. மேலும், பாஸ்டேக் அட்டைகள் வாகன ஓட்டிகளுக்கு உடனுக்குடன் கிடைக்கவில்லை எனவும் பாஸ்டேக் அட்டைகள் போதுமான அளவுக்கு இருப்பு இல்லை என்றும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பாஸ்டேக் அட்டையை கட்டாயமாக்குவதற்கு மேலும் காலஅவகாசம் அளிக்க வேண்டுமென தேசிய நெடுஞ்சாலைத் துறை மத்திய போக்குவரத்து அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது.

இந்தக் கோரிக்கையை ஏற்று அனைத்து சுங்கச்சாவடி களிலும் 75 சதவீதம் பாஸ்டேக் பாதைகளாகவும் மீதமுள்ள 25 சதவீத பாதைகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்தும் வகையும் செயல்படுத்த மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பாஸ்டேக் அட்டை கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ஐசிஐசிஐ, எச்டிஎப்சி உட்பட 7 தனியார் வங்கிகள் மற்றும் சில பொதுத் துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பாஸ்டேக் மூலம் கட்டண வசூல் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். 25 சதவீத பாதைகளில் அதாவது ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இரு மார்க்கங்களிலும் தலா 2 பாதைகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம். இதற்கான சலுகை 30 நாட்களுக்கு அதாவது ஜன.14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் பாதையில் பணம் கொடுத்து பயணம் செய்தால் சுங்கக் கட்டணம் 2 மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படும். இதில், ஒரு மடங்கு அபராத கட்டணமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜ் கூறியதாவது: சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசு இதை நடைமுறைப்படுத்த மறுத்து வருகிறது. பாஸ்டேக் அட்டை பெரும்பாலான இடங் களில் கிடைக்கவில்லை. மதுர வாயல், வாலாஜா உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் போதிய அளவில் இருப்பு இல்லை. இதற்கு ஏற்றவாறு போதிய கட்டமைப்பு வசதிகளும் இல்லை. எனவே, நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வரையிலும், பாஸ்டேக் முறையை கட்டாயாமாக்குவதில் அவசரம் கூடாது.

மேலும், கட்டண தொகை பல மடங்கு வசூலித்த பிறகும் இன்னும் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும் உரிமையாளர்களும் அவதிப்படுவதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது. எனவே, இத்தகைய சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x