

அப்துல் கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அச்சிட்ட ஃபிளக்ஸ் மற்றும் போஸ்டர்களின் எண்ணிக்கை அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு அச்சிட்டதைவிட பல மடங்கு அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த ஜூலை 27-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அன்றிரவு 8 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் மூலம் இத்தகவல் பரவியது. இரவோடு இரவாக கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் போஸ்டர்கள் ஊரெங்கும் ஒட்டப்பட்டன. சாலையோரங்கள், தெருமுனைகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் அணிவகுத்தன.
மறுநாள் தமிழகத்தில் திரும்பும் திசையெங்கும் அப்துல் கலாம் படங்கள் தென்பட்டன. தனிநபர்கள், சங்கங்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், கல்வி மற்றும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் குடிசைப் பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் இரங்கல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும், பேருந்துகளும், நாளேடுகளும் செல்லாத கிராமங்களில்கூட கலாம் படம் பொறித்த ஃபிளக்ஸ், போஸ்டர்கள் இடம் பிடித்திருந்தன.
கலாமின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக மட்டும் தமிழகத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஃபிளக்ஸ், போஸ்டர் அச்சடிப்பு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 நாட்களாக இயங்கிய அச்சகம்
இதுபற்றி தமிழ்நாடு டிஜிட்டல் பிரின்டிங் உரிமையாளர்கள் சங்க மாநில ஆலோசகர் கே.ஜே.சுரேஷ்பாபு கூறும்போது, “பொதுவாக அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தினால், எந்த ஊரில் நடக்கிறதோ அங்குள்ள பிரின்டிங் மையங்களில் மட்டும் வேலை அதிகமாக இருக்கும். ஆனால், முதல்முறையாக தமிழகத்திலுள்ள அனைத்து பிரின்டிங் மையங்களும் ஒரே நேரத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு அதிக வேலை பளுவுடன் இருந்தது இதுதான் முதல்முறை. நகரத்தினர், கிராமத்தினர், படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்டர் கொடுக்க குவிந்தனர்.
இந்த 3 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் அளவுக்கு ஃபிளக்ஸ் பிரின்டிங் வர்த்தகம் நடந்துள்ளது. இவ்வளவு பெரிய தொகையை, மக்கள் தாங்களாக முன்வந்து செலவிட்டு கலாமுக்கு அஞ்சலி செலுத்தியதை நினைக்கும்போது வியப்பாக உள்ளது” என்றார்.
திருச்சியிலுள்ள பிரபல லித்தோ அச்சக மேலாளர் ஆர்.மோகன் கூறும்போது, “ஜாதி, மதம், கட்சிகளைக் கடந்து அனைத்து தரப்பினரும் கலாம் படத்துடன் ஆயிரக்கணக்கான போஸ்டர்களுக்கு ஆர்டர் அளித் தது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு. இந்த 3 நாட்களும் இடைவிடாது பணி மேற்கொள்ள வேண்டியிருந்தது. திருச்சியிலுள்ள அச்சகங்களில் மட்டும் பல லட்சம் போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளன” என்றார்.
போஸ்டர் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆர்.மூர்த்தி கூறும் போது, “என் வாழ்நாளில் இதுவரை எந்த தலைவருக்கும் இதுபோல போஸ்டர் ஒட்டியதில்லை. எங்கள் குழுவிலுள்ள 6 பேருடன் சேர்ந்து 3 நாட்களாக பகலில் மட்டுமின்றி, இரவிலும் விடியவிடிய போஸ்டர் ஒட்டினோம். ஒரு போஸ்டரைக்கூட வீணடிக்க மனம் வரவில்லை. கலாம் மீதுள்ள அன்பால் மனசாட்சியுடன் வேலை செய்தோம்.
வழக்கமாக வீடுகளின் முன்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டச் சென்றால் அங்கு குடியிருப்பவர்கள், “விடிந்ததும் துக்கச் செய்தி போஸ்டரில்தான் கண்விழிக்க வேண்டுமா” என்று எங்களைத் திட்டுவார்கள். ஆனால், கலாம் மறைவு போஸ்டர் ஒட்டியபோது ஒருவர்கூட தடுக்கவில்லை, திட்டவும் இல்லை” என்றார்.