

உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு குறித்து அதிமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனவே, ஓரிரு நாளில் தேமுதிக போட்டியிடும் இடங்கள் வெளியிடப்படும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரி வித்தார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையே, கூட்டணியில் உள்ள தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு விரைவில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் இதுபற்றி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘குடியுரிமை சட்ட திருத்த மசோதா அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடியது. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடவுள்ள இடங்கள் குறித்து நாளை (இன்று) காலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக தீர்வு விரைவில் எட்டப்படும்’’ என்றார்.