

மு.யுவராஜ்
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளி மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராஜர், பாரதிதாசன், பாரதியார் உள்ளிட்ட 12 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், இளங்கலை, முதுகலை, பிஎச்டி ( ஆராய்ச்சி படிப்பு) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் வெவ்வேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதால் மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர் சலுகைகளை ஒன்றுபோல் பெற முடியவில்லை.
இதுதொடர்பாக, திருவண்ணாமலையைச் சேர்ந்த பார்வைத் திறன் குறைபாடுடைய ஆசிரியர் எம்.சிவகுமார் கூறியதாவது:மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை கருத்தில்கொண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்புக்கு (பிஎச்டி), மாற்றுத் திறனாளிகளுக்கு 2 ஆண்டுகள் வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது. இதனால், தேர்ச்சி பெற 7 ஆண்டுகள் வரை வாய்ப்புள்ளது.
ஓர் ஆண்டு அவகாசம்
பிற பல்கலைக்கழகங்களில் இந்த விதி கிடையாது. ஓர் ஆண்டு வரை அவகாசம் பெறலாம். ஆனால், 6 மாதத்துக்கு ஒருமுறை அபராதம் கட்ட வேண்டும். ரூ.40 ஆயிரம் வரை அபராதம் கட்ட வேண்டியுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுதுவதற்கான எழுத்தர், சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறார். ஆனால், திருவள்ளுவர், பாரதிதாசன் போன்ற பிற பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்தான் எழுத்தரை நியமிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
எழுத்தருக்கான கட்டணத்தையும் மதுரை காமராஜர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்தான் வழங்க வேண்டும். ஆனால், சென்னை பல்கலைக்கழகத்தில் அக்கட்டணத்தை நிர்வாகமே வழங்குகின்றது.
புத்தகம், தேர்வு கட்டணம் என அனைத்திலும் சென்னை பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை கொடுக்கப்படுகிறது. ஆனால், பிற பல்கலைக்கழகத்தில் சலுகைகள் அளிக்கப்படவில்லை.
பல்கலை. எல்லை வரையறை
பகுதி நேரமாக ஆய்வு படிப்புகளை படிக்க விரும்புபவர்களுக்கு பல்கலைக்கழக எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, கரூரில் இருக்கக் கூடிய மாற்றுத் திறனாளி மாணவர்களால், பகுதி நேரமாக படிக்க சென்னை பல்கலைக்கழகத்தில் பதிவு செய்ய முடியாது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்தான் பதிவு செய்ய முடியும்.
முழுநேரமாக படிப்பது என்றால் சென்னை பல்கலைக்கழகம் இருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு, சென்றால் விடுதி கட்டணம், போக்குவரத்து, சாப்பாடு என கூடுதல் செலவாகும்.
இதுவே, சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டணம், திருச்சி பாரதிதாசன் பல்கலை.யிலும் கிடைக்கப் பெற்றால் மாற்றுத் திறனாளிகள் சிரமப்பட்டு சென்னைக்கு வர வேண்டியிருக்காது.
எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.