Published : 16 Dec 2019 07:25 AM
Last Updated : 16 Dec 2019 07:25 AM

எம்.பி.. ஒரு தரம்.. எம்எல்ஏ.. ரெண்டு தரம்.. மேயர்.. மூணு தரம்..

இந்திய தேர்தல் களம் நாளுக்கு நாள் விநோதமாக மாறி வருகிறது. தனி நபர் செய்தால் குற்றம்; அரசியல் கட்சிகள் செய்தால் தவறே இல்லை. ‘அமைப்பு முறை’யும் அனுமதிக்கிறது. அங்கீகரிக்கிறது. அதைத்தான் சரி என்கிறது.

உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுகிறது; இது சட்ட விரோதம்; இவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள். நல்லது. சில மாதங்களுக்கு முன்பு, மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் எல்லாம் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப் பட்டனர்? கட்சியின் மிக மூத்த உறுப்பினர்கள், தியாகிகள், செயல் வீரர்கள் எத்தனை பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது? இவர்களிடம் இருந்து விருப்ப மனுவாவது பெறப் பட்டதா?

நேர்காணலின்போது வெளிப்படையாகவே, எவ்வளவு செலவு செய்ய முடியும் என கேட்கப்பட்டு, உறுதிமொழி பெறப்பட்டு, அதன் பிறகே தகுதியானவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

இது அடிமட்ட தொண்டனுக்கே தெரிந்த உண்மை, சர்வ அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையத்துக்கு தெரியாமல் போய் விடுமா? ஆனாலும் கண்டும் காணாதது போல் இருந்து, நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்தி சாதனை புரிந்து வருகிறது.

தமிழகத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு நகரம். தற்போது, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட, தனது கட்சியில் விருப்ப மனு தருவார் என்று எதிர்பார்த்தேன். இல்லை என்று தெரிந்தது. என்ன காரணம்? விசாரித்ததில் சொன்னார்கள் - கட்டுப்படி ஆகாது, கட்சித் தலைமைக்கு இவ்வளவு; மாவட்டச் செயலாளருக்கு இவ்வளவு; நகரச் செயலாளரிடம் இவ்வளவு (செலவுக்கு) என முன்பே தந்துவிட வேண்டும். பல லட்சங்கள் தாண்டும்.

இவ்வளவும் செய்துவிட்டு பதவிக்கு வந்தாலும், என்ன சாதித்துவிட முடியும் என்று விளங்கவில்லை. ஆக, வேண்டாம் என்று விட்டு விட்டாராம். இதைத் தாண்டி, கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தங்கள், எதிர் முகாமில் இருந்து வரும் சமிக்ஞைகள், 'மூலம்' (source) கண்டுபிடிக்க முடியாத சன்மானங்கள், அன்பளிப்புகள், நன்கொடைகள், உத்தரவாதங்கள்.

இதையெல்லாம் தாண்டி விஞ்சி நின்றால்தான், வாக்களிக்கும் சாமானியர்களிடம் நிற்கிற வாய்ப்பு கிட்டும். நிர்வாகம், நீதியம், ஆணையம், காவல் துறை, வருவாய் துறை, ஊடகங்கள் உட்பட வாக்காளன் வரை அத்தனை பேருக்கும் தெரிந்து இருக்கிறது.

கட்சித் தலைமை கைகாட்டும் நபர்கள்தான் போட்டியிடவே முடியும். கனவான்களே, இதற்குப் பெயர் ஏலம் இல்லை என்றால், வேறென்ன? எத்தனையோ முறை, எத்தனையோ பேர் சொல்லிப் பார்த்துவிட்டார்கள். அரசியல் கட்சிகள் ஜனநாயக நெறிகளின்படி நடந்துகொள்வது இல்லை.

உட்கட்சித் தேர்த்லகள் முறையாக நடைபெறாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். யார் கேட்கிறார்? எல்லா பெரிய கட்சிகளும், அனைத்து அதிகாரமும் தலைவருக்கு / பொதுச் செயலாளருக்கு என பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன.

ஆனால், ஒரு சில கிராமங்களில் ஒரு சிலர் சேர்ந்து முடிவு செய்தால், அது சட்ட விரோத ஏலம். நிச்சயமாக தவறுதான். நியாயப்படுத்தவே இல்லை. இரண்டு கேள்விகள் எனக்குள் எழுகிறது.

எல்லோரும் பேசி, விவாதித்து அடைகிற ‘ஒருமித்த கருத்தால் தேர்வு’ (selection by consensus) அருவருப்பானதா? உள்ளூர் மக்களுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டிலும், அதிகாரிகளுக்கு அதிக அக்கறை இருந்துவிட முடியுமா? ஒருமித்த கருத்து சட்ட விரோதமா? நிச்சயமாக இல்லை. அப்படி இருக்க, பொது இசைவு ஏற்படுத்தும் வழிமுறை குறித்து, ஏதேனும் எங்கேனும் யாராலாவது சொல்லப் பட்டிருக்கிறதா?

நாம் குறிப்பிடுவது, உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை பற்றி மட்டுமே. எது எதற்கோ கோடிக் கணக்கில் செலவு செய்யும் அரசு நிர்வாகம், தேர்தல் ஆணையம் (இரண்டும் ஒன்றுதான்) நியாயமாக நடுநிலையுடன் பொதுக் கருத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏன் ஏற்படுத்தித் தரக் கூடாது?

‘போட்டி’ இருந்தால்தான், ஜனநாயகம் என்று பொருளா? ஆமாம்.. காஷ்மீர் மாநிலத்தில், தேர்தல்கள் எந்த லட்சணத்தில் நடைபெறுகின்றன? அங்கே உண்மையிலேயே போட்டியிட்டுத்தான் வெற்றி பெற்று பதவிக்கு வருகிறார்களா?

பல இடங்களில் போட்டியிட ஆள் கிடைப்பதே இல்லை. யாரையேனும் பிடித்து வந்து வேட்பாள ராக அறிவித்து, போட்டியின்றி தேர்ந்தெடுத்து அறிவிக்கிறார்களே, இதுவெல்லாம் 'ஏலம்' வகையில் அடங்காதா?

ஒரு கட்சிக்கு இத்தனை லட்சம் கொடுத்தோம் என்று மற்றொரு கட்சி, ஆணையத்தின் முன்பு பிரகடனம் தந்தது. அதைப் பெற்ற கட்சியும் ஒப்புக் கொண்டது. இதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்லிவிட்டது. இதை எந்த வகையில் சேர்ப்பது?

பணம் மட்டும்தான் ஏலத்தில் அடங்குமா? சாதி? எதற்கும் அடங்காத மாபெரும் சக்தியா அது? சாதி வாரியாகப் பிரித்துப் பிரித்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்களே -சாதிவாரி ஏலம் - நியாயப்படி, தார்மீக ரீதியாக மிக சரியா?

அங்கே உன் சாதிக்காரன் எத்தனை பேருய்யா இருக்கான்? என்று வினவாத பெரிய கட்சி, தமிழ்நாட்டில் இருக்கிறதா? சில சுயேச்சைகள், நாம் தமிழர் போன்ற சிறு கட்சிகள் மட்டுமே, இந்தக் கேள்விகளை முன்வைக்கிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு தரப்படும் மரியாதையை அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன்.

பெரிய கட்சிகளின் வேட்பாளர் தும்மினால்கூட வந்து நலம் விசாரிக்கும் அதிகார வர்க்கம், சிறு கட்சி, சுயேச்சை வேட்பாளர்களை அலட்சியப் படுத்துவதை எந்த சட்டம் அனுமதிக்கிறது?

பஞ்சாயத்து பதவிகள் ஏலம் விடப்படுவதைக் கண்டிப்பதும் தடுப்பதும் தேவைதான்; வரவேற்கிறோம். ஆனால், ஆட்டுக் குட்டிகளை அடக்குவதற்கு ஓடி வருகிற பெரியவர்கள், தலைகளை, மலைப் பாம்புகளைப் பிடிக்க ன்ன செய்யப் போகிறார்கள்?

சிலரின் பிழைகள் பெரிதாக்கப்படுகின்றன. வேறு சிலரின் தவறுகள் - அங்கீகரிக்கப் படுகின்றன. நியாயம் பொதுவானது. ஆணையம் சொல்வதால், நீதியம் உரைப்பதால் - நியாயங்கள் மாறுவதில்லை. ஏலங்கள் நிற்கட்டும். நிற்கும். மற்ற பிற தேர்வுகள்? தீர்மானங்கள்? கொறடாக்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x