தீப்பெட்டி, பட்டாசு தொழிலை தொடர்ந்து சோலார் மின் உற்பத்தியில் தடம் பதிக்கும் விருதுநகர்

தீப்பெட்டி, பட்டாசு தொழிலை தொடர்ந்து சோலார் மின் உற்பத்தியில் தடம் பதிக்கும் விருதுநகர்
Updated on
1 min read

தீப்பெட்டி, பட்டாசு தொழிலை தொடர்ந்து சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்திலும் விருதுநகர் மாவட்டம் தடம் பதித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள சுமார் 2.30 கோடி மின் நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம், சுமார் 10,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும், மின் பற்றாக்குறையைப் போக்க சூரிய ஒளி மின் ஆற்றல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானியங்களை வழங்கி வருகிறது.

ஆனாலும், மின்நுகர்வு அதிகரித்து வருவதால் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்கள் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறது.

அதனால் வெயில், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமான விருதுநகரில் தற்போது சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளும் நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அருப்புக்கோட்டை உள்ள முத்துராமலிங்கபுரத்தில் தனியார் மூலம் சூரிய ஒளியிலிருந்து 8 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

செங்குன்றாபுரம் அருகே உள்ள செங்கோட்டையில் 40 மெகாவாட் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையமும், பந்தல்குடி, குருந்த மடம், பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, ஆமத்தூரில் தனியார் மூலம் அமைக்கப்பட்டுவரும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மொத்தம் 12 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

செங்குன்றாபுரம் அருகே செங்கோட்டையில் 40 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்துக்காக, அப்பகுதியில் 300 ஏக்கரில் சோலார் பேனல்கள் பொருத்தும்பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஒரு நபருக்கு சுமார் ரூ.300 முதல் ரூ.400 வரை தினமும் ஊதியம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அலுவலர்கள் கூறுகையில், மின் உற்பத்தியில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. செங்கோட்டையில் அமைக்கப்பட்டுவரும் 40 மெகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் 3- வது வாரத்தில் இந்த மின் உற்பத்தி நிலையம் செயல்படத் தொடங்கும் என்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எரிச்சநத்தத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இணைக்கப்பட்டு, அதன்மூலம் பவர் கிரிட் மெயின்லைனில் இணைக்கப்படும். பணிகள் முடிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களில் அடுத்தடுத்து மின் சாரம் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படும். இதனால், மின் பற்றாக்குறை பெருமளவில் குறையும் என்றனர்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in