

சென்னை விமான நிலையத்தில் 46-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்தது.
சென்னை விமான நிலையத்தில் மேற்கூரைகள், கிரானைட் கற்கள், கண்ணாடி கதவுகள் உடைந்து விழுந்து விபத்து நடப்பது தொடர் கதையாக உள்ளது. ஏற்கெனவே, 45 முறை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், 46-வது முறையாக நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் உள்நாட்டு விமான நிலையத்தின் 3-வது தளத்தில் உள்ள விஐபிகள் ஓய்வு அறையில் இருந்த கண்ணாடி (5 அடி உயரம் 4 அடி அகலம்) திடீரென உடைந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் பயணிகள் யாரும் அங்கு இல்லாததால், யாருக்கும் காயம் இல்லை. இதுபற்றி தகவல் அறிந்து வந்த விமான நிலைய அதி காரிகள், உடைந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். இதையடுத்து, ஊழியர்கள் கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தினர். கண்ணாடி உடைந்து விழுந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.