Published : 15 Dec 2019 10:56 AM
Last Updated : 15 Dec 2019 10:56 AM

தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பப்பாளி சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்: குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த கோரிக்கை

நொகனூர் மலைக்கிராமத்தில் விவசாயி வெங்கடேஷின் தோட்டத்தில் குட்டை ரக பப்பாளி மரங்களில் பப்பாளி காய்கள் காய்த்துள்ளன

ஓசூர்

பழ வகை பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு குறைந்த செலவில் நிறைந்த லாபம் தரும் பழ வகை பயிராக பப்பாளி விளங்குகிறது. பப்பாளி பழங்கள் நல்ல சுவையுடன் மருத்துவ குணம் மிகுந்து காணப்படுவதால் சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக உருவெடுத்துள்ளன. சந்தைகளில் பப்பாளி பழத்துக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுவதால், பப்பாளி சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம், ராயக் கோட்டை, தேன்கனிக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பப்பாளி பயிரிட்டு வருகின்றனர். இதில் மலைக் கிராமங்களான தேன்கனிக்கோட்டை, நொகனூர், மரகட்டா, இருதுக்கோட்டை, அந்தேவனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பப்பாளி சாகுபடியில் அதிகளவு ஈடுபட்டுள்ளனர்.

மொத்த விலையில் ரூ.10 முதல் ரூ.15 வரை விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் ஒரு கிலோ பப்பாளிப்பழம், சந்தைகளில் சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. சிறுவியாபாரிகள் பப்பாளி தோட்டத்துக்கே வந்து தங்களுக்கு தேவையான பப்பாளி பழங்களை வாங்கிச் செல்வதால் இடைத்தரகர் கமிஷன் இன்றி பப்பாளி சாகுபடியில் நிலையான லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். நாற்றுப் பண்ணையில் உருவாக்கப்படும் பப்பாளி நாற்று ஒன்றுக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை விலை உள்ளது. இருப்பினும் பப்பாளி சாகுபடியில் அதிகளவு மகசூல் கிடைப்பதால் விவசாயிகளுக்கு லாபம் தரும் பயிராக பப்பாளி விளங்குகிறது.

இதுகுறித்து நொகனூர் மலைக் கிராமத்தில் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி வெங்கடேஷ் கூறியதாவது:

பப்பாளி சாகுபடியில் தைவான் நாட்டைச் சேர்ந்த ரெட்லேடி என்ற பப்பாளி ரகம் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த வகை பப்பாளி மரங்கள் அதிக மகசூல் தருகிறது. மேலும் சிவப்பு நிறத்துடன், சுவை மிகுந்து இருப்பதால் சந்தையிலும் வாடிக்கையாளர்களால் விரும்பி வாங்கப்படும் பழமாக ரெட்லேடி பப்பாளிப் பழம் உள்ளது.

பப்பாளி நாற்றுகள் நடவு செய்யப்பட்ட நாளில் இருந்து 8 மாதத்தில் பலன் கொடுக்க தொடங்கி விடும். நன்கு பராமரிப்பு செய்து வந்தால் ஒரு ஏக்கர் பப்பாளி தோட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 80 டன் முதல் 100 டன் வரை அறுவடை செய்யலாம். மொத்த விற்பனையில் ஒரு கிலோ பப்பாளி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவு செய்தாலும் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. எட்டு மாதத்தில் ஆரம்பிக்கும் பப்பாளி அறுவடை தொடர்ந்து 2 ஆண்டுகள் நீடித்து பலன் கொடுக்கும். பழ வகைகளில் அதிகளவு லாபம் தரும் பழமாக பப்பாளி விளங்குகிறது.

பப்பாளியில் குறைந்த செலவு, அதிகளவு லாபம் கிடைப்பதால் இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் பப்பாளி பயிரிடுவதில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். இங்குள்ள பப்பாளி தோட்டங்களில் குரங்குகள் கூட்டமாக புகுந்து பப்பாளி காய் மற்றும் இலைகளை தின்று சேதப்படுத்தி விடுகின்றன. அதேபோன்று பறவைகளாலும் பப்பாளி பழம் சேதப்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு வருமானம் குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், தோட்டக்கலைத்துறையினர் பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தளி துணை தோட்டக்கலை அலுவலர் பி.சுப்பிரமணியன் கூறியதாவது: பப்பாளி தோட்டத்தில் குரங்குகள் மற்றும் பறவைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் ‘பறவைகள் பாதுகாப்பு வலை’ வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே பப்பாளி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு, சலுகை விலையில் கிடைக்கும் பறவை பாதுகாப்பு வலைகளைப் பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் சொட்டுநீர் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x