

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவ வார்டில் செருப்புடன் வந்தவரை தட்டிக் கேட்ட மருத்துவ மாணவி வாயில் ரத்தம் வரும்படி தாக்கப்பட்டார்.
அவர்களைக் கைது செய்யக் கோரி, மருத்துவர்கள் வேலையைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பேறுகாலத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை இரவு பணி மருத்துவர்கள் பரிசோதனை செய்து, பிரசவத்திற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். காலை 7.30 மணியளவில் காலை பணி பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவி மாலதி பணிக்கு வந்துள்ளார். அவர், அந்த கர்ப்பிணி பெண்ணை இயல்பான பிரசவத்திற்காக சில மருத்துவ வழி முறைகளை சொல்லிக் கொடுத்துள்ளார். ஆனால், அதற்கு அந்த கர்ப்பிணி பெண் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
உடனே, கர்ப்பிணி பெண்ணை அந்த மருத்துவ மாணவி திட்டியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அந்த கர்ப்பிணி பெண்னுடன் இருந்த பெண் ஒருவர் மருத்துவ மாணவியை பதிலுக்கு திட்டியுள்ளார். உடனே மருத்துவ மாணவி, காலில் செருப்பு அணிந்து வந்திருந்த அந்தப் பெண்ணை செருப்புடன் எதற்கு வார்டுக்குள் இருக்கிறீர்கள், வெளியே போங்கள் எனச் சொல்லியுள்ளார்.
இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் அந்தப் பெண், அந்த மருத்துவ மாணவியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், அந்த மாணவிக்கு வாயில் பலமான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மற்ற மருத்தவர்கள் ஓடி வந்து அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த தகவல் அறிந்த மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் பணியை புறக்கணித்துவிட்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் தலைமையில் மருத்துவமனை வளாகத்தில் கூடினர்.
அவர்கள், மாணவியை தாக்கிய பெண்ணை மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், மருத்துவருக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய செக்கியூரிட்டிகள் பாதுகாப்பு கொடுக்க தவறியதால் அவர்களை ‘சஸ்பெண்ட்’ செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. போலீஸார், மருத்துவர்களை சமாதானம் செய்து, கைது செய்வதாக கூறி மருத்துவ மாணவியை தாக்கிய பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதனால், மருத்துவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று பணிக்கு திரும்பினர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘சிகிச்சை தாமதமானதாக மருத்துவ மாணவியிடம் பிரசவத்திற்கு வந்த பெண்ணுடன் வந்தவர்கள் தகராறு செய்தனர். அவர்கள் காலில் செருப்பு அணிந்து வார்டில் இருந்துள்ளனர். கர்ப்பிணிகளுக்கு நோய்க் கிருமி தொற்று ஏற்பட்டதால் அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் யாரையும் செருப்பு அணித்து பிரசவ வார்டிக்குள் அனுமதிக்க மாட்டோம்.
அதனால், அந்த மருத்துவ மாணவி, தேவையில்லாமல் சண்டைப்போடுவதோடு செருப்பு அணிந்து உள்ளே வந்துள்ளீர்கள். உடனடியாக வெளியே போகும்படி சொல்லியுள்ளார். அந்த கோபத்தில் தகராறில் ஈடுபட்ட பெண்ணும், அவருடன் வந்த மற்றொரு பெண்ணும் மருத்துவ மாணவியை ஒரு பெண் என்று கூட பராமல் தாக்கியுள்ளனர். அவர்களை கைது செய்தால் மட்டும்போதாது. மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், ’’ என்றனர்.
கர்ப்பிணி பெண் உறவினர்களிடம் கேட்டபோது, ‘‘சிகிச்சை தாமதமானதோடு அந்த மருத்துவ மாணவி, கர்ப்பிணியை தகாத வார்த்தையால் திட்டினார். அதில் ஏற்பட்ட தகராறில் அடித்தாக கூறுகிறார்கள்’’ என்றனர்.