

தேக்கம்பட்டியில் 48 நாட்கள் நடைபெறவுள்ள புத்துணர்வு முகாமுக்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 8 யானைகள் அழைத்து செல்லப்பட்டன.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, திருக்கோயில்கள் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான யானைகளுக்கு, தமிழ்நாடு வனத்துறை உதவியுடன் நடத்தப்பெறும் புத்துணர்வு முகாம், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் இன்று தொடங்கி 48 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதில் திருநெல்வேலி மண்டலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலின் யானை காந்திமதி, திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயிலின் சுந்தரவல்லி மற்றும் குறுங்குடிவல்லி என மூன்று யானைகளும், தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலின் யானை கோமதி, தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் யானை தெய்வானை, ஆழ்வார்திருநகரி, அருள்மிகு ஆதிநாத ஆழ்வார் திருக்கோயிலின் யானை ஆதிநாயகி, திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயிலின் யானை குமுதவல்லி, இரட்டைத் திருப்பதி திருக்கோயிலின் யானை லட்சுமி என 8 யானைகள் பங்கேற்க செல்கின்றன.
இந்த யானைகள் அந்தந்த பகுதிகளில் இருந்து லாரிகளில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டன. அறநிலையத்துறை நாகர்கோவில் உதவி ஆணையர் து. ரத்தினவேல் பாண்டியன் மற்றும் திருநெல்வேலி உதவி ஆணையர் தி.சங்கர் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.