

‘‘இந்தியாவில் முஸ்லிம்களை அகதிகளாக்கவே குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவர காரணம்,’’ என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியார்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் கலாச்சாரம் முற்றிவிட்டது. அதன் விளைவாகத் தான் ஊராட்சித் தலைவர் பதவிகள் ஏலம் விடப்படுகிறது. பதவிகளை கூறுபோட்டு விற்பது வருந்தத்தக்கது. ஜனநாயகத்திற்கு இழுக்கு.
அதிமுக ஒரு மதசார்பற்ற கட்சியாக இருந்தும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இதை செய்திருக்க மாட்டார்.
ஜிஎஸ்டி ஒரு குழப்பமான வரி. நல்ல திட்டங்களை பாஜக சிதைத்ததால் பொருளாதாரம் நஷ்டத்தில் உள்ளது. சமஸ்கிருதம் தான் வாழ்க்கை; அது தான் அனைத்திலும் உயர்ந்த மொழி; அதற்கு மட்டுமே முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை என்னால் ஏற்க முடியாது.
படிப்படியாக இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றி, ஒருகட்டத்தில் குடியுரிமையை பறித்து அவர்களை இந்தியாவில் அகதிகளாக்கவே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கொண்டு வரக் காரணம்" என்று கூறினார்.