Published : 14 Dec 2019 04:41 PM
Last Updated : 14 Dec 2019 04:41 PM

‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன் நம் மீது புகார்களைத் தொடுக்கிறார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தன் மீதான புகார்களை ஸ்டாலின் நிரூபித்தால் இன்றே அனைத்துப் பதவிகளையும் ராஜினாமா செய்ய தயார் என, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (டிச.14) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து, அதற்கான பணிகளில் தமிழக அரசின் நிர்வாக இயந்திரம் மிக முனைப்புடன் செயல்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த முழு முயற்சி மேற்கொண்டு படுதோல்வியுற்ற திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசைக் களங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் உள்நோக்கத்துடன், இல்லாத ஒன்றை இருப்பதைப் போல இட்டுக்கட்டி பெருநகர சென்னை மாநகராட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டும், அவராக சொல்லுகின்ற குற்றச்சாட்டு இல்லை.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுமான பணிகளில் எம்-சாண்ட் மணலை பயன்படுத்திவிட்டு, ஆற்று மணலை பயன்படுத்தியது போல விலைப்புள்ளியை வழங்கியதாக உண்மைக்கு முற்றிலும் புறம்பான செய்தியை திமுக ஆதரவு பெற்ற இயக்கம் ஒன்று அறிக்கை வெளியிட்டது.

இந்த திரிக்கப்பட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி துறையினை தன் பொறுப்பில் வைத்திருந்த மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணி என்ன? 'ஜீரோ'!

தமிழகத்தின் துணை முதல்வராக பதவி வகித்த போதும் அவர் ஆற்றிய பணிகள் என்ன? 'ஜீரோ' !

இப்படி, ஜீரோ உள்ளாட்சி அமைச்சர் என்றும், ஜீரோ துணை முதல்வர் எனும் பெயர் வாங்கிய ஜீரோ ஸ்டாலின், தான் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன் நம்மைப் பார்த்து குறை சொல்கிறார், குற்றம் சுமத்துகிறார்.

முதலில் சென்னை மாநகராட்சியில் பணிகள் ஏதும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், சென்னை மாநகரில் வார்டுகள் தோறும் சிறப்பாக நடைபெற்று வரும் பணிகளை மக்கள் நேரில் பார்த்து, உணர்ந்திருக்கின்ற காரணத்தால், இந்த பொய் எடுபடாது என்று சொல்லி, ஜமக்காளத்தில் வடிக்கட்டிய வேறொரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

ஆனால், நம்மைக் குற்றம் சொல்லப்போய், சென்னை மாநகராட்சியில், உள்ளாட்சி துறை மூலம் நடக்கும் எண்ணற்ற பணிகள் பற்றி அவரையும் அறியாமல் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்திருக்கின்றார் மு.க.ஸ்டாலின்.

மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள், நடைபாதை அமைக்கும் திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி தொடர்பான பணிகள், உலக வங்கி உதவியுடன் நடக்கும் திட்டங்கள் என்று தமிழக அரசு ஆற்றிவரும் பணிகளையும், செயல்படுத்தும் திட்டங்களையும் பட்டியலிட்டுக் காட்ட வேண்டிய நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டிருக்கிறார்.

ஆனால், அந்தப் பணிகளில் ஆற்று மணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுத்துவிட்டு எம்-சாண்ட் பயன்படுத்துவதாகவும், 1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது எனும் நஞ்சைக் கக்கி இருக்கிறார் ஸ்டாலின்.

ஏதேனும் தவறு செய்துவிட்டு, அதுபற்றி மக்கள் கேட்டால், உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறுவது ஸ்டாலினின் வழக்கம். தேர்தல் கூட்டணி அமைக்க கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பணம் கொடுத்த நிகழ்வில் அப்படித்தான் சொன்னார் ஸ்டாலின்.

ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை எப்படி அடித்தளமே இல்லாத ஒரு குற்றச்சாட்டு, என்பதையும், அவரது அறிக்கையில் உண்மை என்பது ஒரு துளி அளவும் இல்லை என்பதையும், எத்தகைய காழ்ப்புணர்ச்சியுடன் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது எங்களது கடமை என்ற வகையில், இதற்கான முழு விளக்கத்தையும் மக்கள் முன் வைக்கிறேன்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள், தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி முறையாக ஆன்லைன் மூலம் கோரப்பட்டு, விதிகளுக்குட்பட்டு ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்படுகின்றன.

அவ்வாறு முடிவு செய்யப்பட்டு, கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 ஆண்டுகளில், ஆற்று மணல் அல்லது எம்-சாண்ட் கலந்த சிமெண்ட் கலவைகள் கொண்டு ரூ.1164.85 கோடிக்கு பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து சற்று விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ரூ.102.35 கோடி அளவுக்கு உட்புற கான்கீரிட் சாலைகளும், ரூ.65.18 கோடி மதிப்பீட்டில் நடைபாதை பணிகளும், ரூ.699.64 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகளும், ரூ.145.95 கோடி மதிப்பீட்டில் கட்டிடப் பணிகளும், ரூ.144.69 கோடியில் ஸ்மார்ட் சிட்டி – சீர்மிகு நகரப்பணிகளும், ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் பாலப்பணிகளும், 2017-18ஆம் ஆண்டு முதல் நடப்பு மாதம் வரை மொத்தம் ரூ.1164.85 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு, நடைபெற்ற ரூ.1164.85 கோடி பணிகளில், மணல் சேர்த்து செய்யப்படும் கான்கிரீட் பணிகள் 33 சதவிகிதமே ஆகும். இதன் மதிப்பீடு ரூ.384.04 கோடி மட்டுமே ஆகும். இந்த கான்கிரீட் பணிகளில் கலக்கப்படும் எம்-சாண்ட் அல்லது ஆற்று மணலின் அளவு வெறும் 8.5 சதவிகிதம் மட்டுமே ஆகும். அதாவது, ரூ.32.67 கோடி அளவிலான கான்கிரீட் பணிக்கு மட்டுமே எம்-சாண்ட் அல்லது ஆற்று மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செயல்படுத்தப்படும் பணிகளின் மதிப்பே வெறும் ரூ.32.67 கோடி தான் என்னும் போது, அதில் ஏதோ ரூ.1000 கோடி முறைகேடு நடந்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது எவ்வளவு கடைந்தெடுத்த பொய் என்பதையும், அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் எந்த அளவுக்கு தன் தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார் என்பதையும் தமிழக மக்கள் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

ஆற்று மணலைவிட, எம்-சாண்ட் விலை நூற்றுக்கு 50 சதவீதம் குறைவு என்று, மணல் விலை குறித்த எந்த ஒரு அடிப்படை அறிவும் இன்றி, ஸ்டாலின், அந்த அறிக்கையில் அள்ளி விட்டிருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம், மாநிலம் முழுவதும் உள்ள ஆற்று மணல் குவாரிகளை மூடுமாறு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளில் மணலைப் பயன்படுத்தத்தக்க மாற்று ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தியது.

இவ்வாறு ஆற்று மணல் குவாரிகள் மூடப்படும் சூழ்நிலையில், ஆற்றுமணல் இல்லாத காரணத்தால், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு பணிகள் தடைப்பட்டுவிடக் கூடாது என்பதனைக் கருத்தில் கொண்டு, ஆற்று மணலைப் போன்ற தரம் கொண்ட எம்-சாண்ட் பயன்படுத்தி பணிகளை தொடர வேண்டுமென்று தமிழக அரசு அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியது.

மேலும், கான்கிரீட் தயாரிக்கும் பணிகளில், ஆற்று மணல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், எம்-சாண்ட் பயன்படுத்தலாம் என்று பொதுப்பணித் துறையின் மூலம் ஆணை வெளியிடப்பட்டது.

இந்த எம்-சாண்டின் விலை தான் ஆற்று மணலைவிட நூற்றுக்கு 50 சதவீதம் குறைவு என்று அளந்து விட்டிருக்கிறார் ஸ்டாலின்.

பொதுப்பணித்துறையானது, ஒவ்வொரு வருடமும் திட்டப் பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிடும். அவ்வாறு ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை அளித்துள்ள எம்-சாண்ட் மற்றும் ஆற்று மணல் விலைப்பட்டியலை ஒப்பீட்டுப் பார்த்தால், எது விலைஅதிகம், எது விலை குறைவு என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

எம்-சாண்டின் விலை, 2017-18 ஆம் ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு ரூ.434.29 ஆகவும், அதே நேரத்தில் ஆற்று மணலின் விலை ரூ.168.00 ஆகவும் இருக்கிறது.

அதேபோல, 2018-19 ஆம் ஆண்டில், எம்-சாண்ட் ரூ.777 ஆகவும், ஆற்று மணலின் விலை ரூ.168 ஆகவும், 2018-19ல் எம்-சாண்ட் ரூ.1250 ஆகவும், ஆற்று மணலின் விலை ரூ.447 ஆகவும், இருந்தது.

இதன்படி, கடந்த 2017-ல் இருந்து 2018 வரை எல்லா காலகட்டங்களிலுமே எம்-சாண்ட் விலை ஆற்று மணலை விட மிக அதிகமாகவே பொதுப்பணித் துறையின் விலை பட்டியலில் உள்ளது. இதனையே தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் பின்பற்றுகிறது. இது கூட உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த எதிர்கட்சித் தலைவருக்கு தெரியாதது மிகவும் பரிதாபம் ஆகும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு அலுவலக விலைப் பட்டியலைவிட கூடுதலாக 10 முதல் 30 சதவீதம் வரை தற்போது வழங்குவதாக புகார் கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

இது ஒப்பந்த நடைமுறைகளிலும், அதனைத் செயல்படுத்தும் வழிமுறைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான் என்று மு.க.ஸ்டாலினுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.

ஒப்பந்தப் பணிக்குத் தேவையான பொருட்களின் விலை உயர்வு, கால தாமதம் முதலான காரணங்களால், ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையை ஏற்று அதில் நியாயம் இருக்கிறதா என ஆய்வு செய்து, அக்கோரிக்கை நியாயமானது என அறியும் பட்சத்தில் விலை உயர்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

திமுக ஆட்சி காலத்திலேயே 2008-ம் ஆண்டில் நடைபெற்ற கட்டிடத் துறை பணிகளுக்கு 10 முதல் 45 சதவீதம் வரையிலும், தகன மேடை அமைப்பதற்கான பணிகளுக்கு 65 சதவீதம் வரை கூடுதலாகவும் வழங்கப்பட்டது.

திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பாலப் பணிகளுக்கு 35 முதல் 73 சதவீதம் வரை கூடுதலாக வழங்கப்பட்டது.

1999-ம் ஆண்டு நடைபெற்ற சாலைப் பணிகளுக்கு 42 சதவீதமும், 2008-ம் ஆண்டு நடைபெற்ற மின்துறை பணிகளுக்கு 24 சதவீதமும், பூங்கா பணிகளுக்கு 38 சதவீதம் வரையிலும் கூடுதலாக வழங்கப்பட்டது.

இதற்கான ஆதாரங்கள் முழுமையாக பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தற்போது உள்ளது. எதற்கெடுத்தாலும், உள்ளாட்சி துறை அமைச்சர் என்ற முறையில் என்னை குற்றம் சொல்லும் மு.க.ஸ்டாலின், அவர் துணை முதல்வராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராகவும் பதவி வகித்தபோது, திட்டப் பணிகளை செயல்படுத்த மதிப்பீட்டினை விட அதிகமான சதவீதத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்டதற்கு, அவர் தான் காரணமா? இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன கூறப்போகிறார்?

ஒவ்வொரு வருடமும் பொதுப்பணித் துறையின் விலைப்பட்டியல் பெற்று, பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டடத்துறை மூலம் மற்ற பணிகளின் செலவினங்கள், அதாவது வேலையாட்கள் செலவு, வைபரேட்டர் செலவு, கான்கிரீட் பம்பிங் செலவு, கியூரிங் செலவு, மின்சார செலவு ஆகியவைகளின் விலைகளும் சேர்க்கப்பட்டு, அனைத்து பணிகளுக்கான விலைப் பட்டியல் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் மற்ற அனைத்து துறைகளுக்கும் ஆன் லைன் மூலம் தெரிவிக்கப்படும். இதன், அடிப்படையிலேயே அனைத்து துறைகளிலும் பணிகளுக்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறு வெளியிடப்பட்ட விலைப்பட்டியலின்படி, எம்-சாண்ட் மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் ஆர்.எம்.சி எம்-30 கிரேடு கான்கிரீட் பணிக்கான விலை ரூ.8,073 / எம்3 ஆகும். இப்பணியை ஆற்று மணல் கொண்டு செய்யும்போது இப்பணியின் விலை ரூ.7,873/ எம்3 ஆகும். ஆற்று மணலைக் கொண்டு செய்யப்படும் பணியின் செலவு குறைவு ஆகும். எம்-சாண்ட் கொண்டு செய்யும் பணியின் செலவு அதிகமாகும்.

மழைநீர் வடிகால் துறையில் பொதுவாக 90 சதவிகிதப் பணிகள் எம்-20 ழுசயனந கான்கிரீட்டை பயன்படுத்தியே மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுள்ளது. ஆர்.எம்.சி எம்-20 கிரேடு கான்கிரீட் எம்-சாண்ட் மூலப்பொருளாகக் கொண்டு செய்யப்படும் பணியின் விலை ரூ.7,686 / எம்3 ஆகும். இப்பணி ஆற்று மணல் கொண்டு மேற்கொள்ளும்போது பணியின் விலை ரூ.7,486/ எம்3 ஆகும். எனவே, ஆற்று மணல் கொண்டு செய்யும் பணியின் செலவு குறைவு ஆகும். எம்-சாண்ட் கொண்டு செய்யும் பணியின் செலவு அதிகமாகும். எனவே, இதனால் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு எந்தவிதமான நிதி இழப்பும் ஏற்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

உதாரணமாக, மண்டலம் 4, வார்டு 46 இல் உள்ள, Goods Shed சாலையில் 1200 X 1200 மி.மீ அளவு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட பணியின் மதிப்பீட்டு தொகை ரூ.534 லட்சமாகும் இதில் கான்கிரீட் பணிகள் தொகை ரூ.176 லட்சமாகும். இதில் மதிப்பீட்டின்படி, ஆற்று மணல் பயன்படுத்த வேண்டியது 8.25% ஆகும். அதன் மதிப்பீட்டுத் தொகை ரூ.14.49 லட்சமாகும். ஆனால், ஆற்று மணல் தடை மற்றும் கிடைக்காத காரணத்தினால் , தமிழக அரசின் கொள்கை முறைப்படி எம்-சாண்ட் கொண்டு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் தொகை ரூ. 40.52 லட்சமாகும். இதனால் எம்-சாண்ட் பயன்படுத்தும்போது ரூ.26.03 இலட்சம் கூடுதலாக செலவு ஏற்படுகிறது. ஆனால், ஒப்பந்ததாரருக்கு கொடுக்கப்படும் தொகை மதிப்பீட்டில் உள்ளது போன்றே குறைவான தொகையான ரூ.14.49 லட்சமே ஆகும்.

மேலும், இணையதளத்தின் வாயிலாக தகவல் எடுக்கும்போது பல்வேறு நகரங்களில் எம்-சாண்ட் சந்தை விலை ஒரு கன மீட்டருக்கு ரூ.1130 முதல் ரூ.1943 வரை உள்ளது. பொதுப்பணித்துறை அளித்துள்ள விலை ரூ.1250 ஆகும். எனவே, வெளிச்சந்தை விலையும் பொதுப்பணித்துறை விலையும் ஒன்றாகவே உள்ளது. எனவே, எம்-சாண்ட் பயன்படுத்தி பணிகளை மேற்கொண்டதினால் பெரு நகர சென்னை மாநகராட்சிக்கு எவ்வித நிதி இழப்பும் இல்லை.

மேலும், அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும்போது, பணிகளை 3-ம் நபர் திட்ட மேலாண்மை கலந்தாளுநர் மூலமாக முழுமையாக ஆய்வு செய்து அவர்கள் எம்-புக்கில் எழுத வேண்டிய அளவுகளையும் மற்றும் தொகையையும் குறிப்பிட்டு கொடுக்கிறார்கள். மேலும், இந்தப் பதிவுகள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்/துறைகளின் பல்வேறு நிலைகளிலுள்ள பொறியாளர்கள் மூலமாக 100 சதவிகிதம் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு, எம்-புக்கில் எழுதப்பட்டு, திட்ட மேலாண்மை கலந்தாளுநர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வேறு பொறியாளர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், இந்தப் பணிகளுக்காக நிதி வழங்கும் டி.என்.யு.ஐ.எஃப்.எஸ்.எல். நிறுவனம், மாநில தரக்கட்டுப்பாடு அலுவலர்களை எல்லா பணியிடங்களுக்கும் தவறாமல் அனுப்பி ஆய்வு செய்துள்ளது. உலக வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் பணிகளை இறுதியில் உலக வங்கியின் குழு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு தரத்தினை உறுதி செய்துள்ளது.

எனவே, தவறான, உண்மைக்குப் புறம்பான வகையில் செய்திகளைப் பரப்பி, மக்கள் மத்தியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுகவின் அங்கமாக செயல்படும் ஒரு இயக்கத்தின் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயாமல் ஆளுங்கட்சியைத் தாக்க ஒரு ஆயுதம் கிடைத்துவிட்டது என்ற ஆர்வக் கோளாறு காரணமாக, அவசரக் குடுக்கையாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும் கடந்த 3 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை எத்துணை ? என்று கேட்கிறார் ஸ்டாலின். தவறு செய்பவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அவ்வப்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றது. நடக்காத ஊழலுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை விஜிலென்ஸ் அறிக்கை போடவில்லை எனக் கேட்பது சிறுபிள்ளைத் தனம் என்பது மட்டுமல்ல, இப்படி கேட்பதின் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை தவிர்த்து விடலாம் என்று எண்ணுவது மூடத்தனத்தின் உச்சமாகும்.

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 27 மாவட்டங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் தேர்தல் நடத்த தடை ஏதும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்று 2011- மக்கள் தொகை அடிப்படையில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று 2011-ம் மக்கள் தொகை அடிப்படையில் தான் தேர்தல் நடக்கின்றது என்று கூடத் தெரியாமல், 1991 மக்கள் தொகை அடிப்படையில் தான் தேர்தல் நடக்கின்றது எனக் கூறி தவறான வாதுரை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீதிமன்றத்தில் குட்டுப்பட்ட பின்னர் விரக்தியின் விளிம்புக்கே சென்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் 25 விழுக்காடு கூட வெற்றி பெற இயலாது எனும் உண்மை நிலை தெரிந்த பின்னர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் குறை சொல்லி, மிரட்டிப் பார்ப்பதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.

மயிலான அரசுக்கு கிடைக்கும் நற்பெயரையும் மக்களின் ஆதரவையும் பொறுக்க மாட்டாமலும், மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் உள்ளாட்சி துறையின் மீதும் அதன் அமைச்சராகிய என் மீதும் காழ்ப்புணர்ச்சியுடன், அவதூறு பரப்பும் நோக்கில், ஸ்டாலின் வாய் குளறி பிதற்றிக் கொண்டிருக்கின்றார் என்பதை தமிழக மக்கள் அனைவரும் மிக நன்றாகவே அறிவார்கள்.

தோல்வி பயத்தின் காரணமாக தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு பிதற்றி வருகிறார்.

ஒரு பொய்யை நூறு தடவை சொன்னால், பொய்யும் உண்மையாகும் என்ற 'கோயபல்ஸ்' தத்துவத்தின் அடிப்படையில் ஸ்டாலின் வெளியிடும் அறிக்கைகளில், மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புபவனின் நிலைக்கு ஒப்பாகும் என்பதனை எடுத்துக் கூற விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கிய ஸ்டாலின் அங்கு மூக்கு உடைபட்டு விட்ட காரணத்தால் அதை மறைக்க மணலை கயிறாக திரிக்கும் அற்ப முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

விட்டத்தின் இடுக்கில் சிக்கிய எலி கீச்சுக் குரல் கொடுப்பது போல சட்டத்தின் பிடியில் சிக்கிய ஸ்டாலின் 'எம்-சாண்ட்', 'எம்-சாண்ட்' என்று கூச்சலிடுகின்றார்.

ஆயிரம் கைகள் தடுத்து நின்றாலும். முழு நிலவின் குளிர் ஒளியை தடுத்துவிட முடியாது. ஆயிரம் பொய்களை ஸ்டாலின் அடுத்தடுத்து சொன்னாலும் மக்கள் மத்தியில் அதிமுகவை களங்கப்படுத்தி விடமுடியாது. எதிர் வரவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒருக்காலும் திமுக வெற்றி பெற முடியாது.

முக.ஸ்டாலின் அமைதி காப்பது அவருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும், அவரை தலைவராகக் கொண்டிருக்கும் கட்சிக்கும் நல்லது.

மு.க.ஸ்டாலின் பொதுக் கூட்ட மேடைகளில் தவறாமல் சொல்லுகிற, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல குற்றச்சாட்டுகளைக் கூறாமல் தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும். எம்- சாண்ட் பற்றிய புகாரில் ஆதாரம் இருக்கும் என்று நம்பினால், இன்றே என் பதவியினை முழுமனதுடன் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். இன்றே மு.க.ஸ்டாலினும் ராஜினாமா செய்ய வேண்டும்.

நிரூபிக்க ஸ்டாலினால் முடியவில்லை என்றால், அவர் திமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவிகளை துறந்துவிட்டு அரசியலை விட்டே அவர் ஒதுங்கிப் போக வேண்டும். நிரூபித்தால், அதிமுக அமைப்புச் செயலாளர், கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை துறந்து, அரசியலை விட்டே விலகத் தயார்" என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x