Published : 14 Dec 2019 01:17 PM
Last Updated : 14 Dec 2019 01:17 PM

அதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து உள்ளாட்சியில் திமுக ஆட்சி அமைத்திடும்: ஸ்டாலின் உறுதி

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

அதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சியில் திமுக ஆட்சி அமைத்திடும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (டிச.14) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தப்பித்துவிடலாமா, அந்தப் பழியைத் தூக்கி எதிர்க்கட்சியான திமுக மீது போட்டுவிடலாமா என 2016 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து விதிமீறல்களில் வெட்கமின்றி ஈடுபட்டு, முறையான இட ஒதுக்கீட்டினையும் தொகுதி வரையறையையும் செய்யாமல் புறக்கணித்து, தில்லுமுல்லுகள் செய்து, தேர்தலை நடத்திடும் தெளிவோ துணிவோ இல்லாமல், உயர் நீதிமன்றத்திடமும் உச்ச நீதிமன்றத்திடமும் வரிசையாகக் குட்டுப்பட்டுக் கொண்டே இருந்தது அதிமுக அரசு.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பிறகு, மக்களின் செல்வாக்கு இல்லாமலேயே, தரை தவழ்ந்து, கால் தடவி, ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மக்களை நேரடியாக சந்திக்கும் திராணி இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். அதற்கு ஏதாவது இட்டுக்கட்டிக் காரணம் கற்பிக்க வேண்டுமே என்பதற்காக, திமுகவினர் மீது பழியைச் சுமத்தினர்.

ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்தில், திமுக என்றைக்குமே மக்களைச் சந்திக்கத் தவறியதுமில்லை, தயங்கியதுமில்லை. வெற்றி - தோல்வியைக் கடந்து, தேர்தலை நாடி எதிர்கொள்கின்ற உண்மையான ஜனநாயக இயக்கம் திமுக. அதுவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை உரிய காலத்தில் திறம்பட நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை திமுக ஆட்சி போல பலப்படுத்திய அரசு தமிழகத்தில் வேறு கிடையாது.

இந்தியாவின் உயிர் அதன் கிராமப்புறங்களில் தான் உள்ளது என்றார் காந்தி. கிராமப்புற மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள், நெசவாளர்கள், உழைக்கும் தொழிலாளர்கள். அதனால் திமுக ஆட்சி அமையும் காலங்களில், கிராமப்புறங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், ஊராட்சிகளின் பொறுப்புகளை அதிகப்படுத்துவதற்கும், தேவையான நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதற்கும் உயரிய முன்னுரிமை அளித்து வந்திருக்கிறது.

ஊராட்சிகளின் பதவிக் காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தியதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் முதல் முறையாக பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதும், மாநில அரசின் சொந்த வரி வருவாயிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியை முதலில் 8 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாகவும், அடுத்து 9.5 சதவிகிதமாகவும், இறுதியாக 10 சதவிகிதமாகவும் உயர்த்தி வழங்கியதும் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், குடிசைகள் இல்லாத ஊராட்சிகளை உருவாக்கிட கலைஞர் வீடு வழங்கும் திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியது திமுக.

மக்களாட்சியின் வேர்களான ஊராட்சி அமைப்புகள், இடையில் 10 ஆண்டு காலம் செயல்பட முடியாமல் கட்டுண்டு கிடந்த நிலையை மாற்றி, 1996 ஆம் ஆண்டு தேர்தலை அறிவித்து வெற்றிகரமாக நடத்தியதும் 2006 ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஊரகப் பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் 76 சதவிகித மக்கள் வாக்களித்திட வகை செய்ததும்; மக்களாட்சியில் அரசு நிர்வாகத்தை ஆலமரத்துக்கு ஒப்பிட்டால், அதன் வேர்களாகவும் விழுதுகளாகவும் உள்ளாட்சி அமைப்புகள் விளங்குகின்றன என்பதை உணர்ந்து, ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட முனைந்ததும் தலைவர் கருணாநிதி தலைமையில் அமைந்த திமுகவின் ஆட்சிதான் என்ற பேருண்மையை நாடு அறியும்.

2006-2011-ல் தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில், உள்ளாட்சி துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து மாநகராட்சிகள் முதல் ஊராட்சிகள் வரை பல்வேறு திட்டங்களை முன்னின்று நிறைவேற்றிய முத்தான வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன்.

ஜனநாயகத்தின் உயிரோட்டம் அதன் ஆணிவேர்களான ஊராட்சி மன்றங்கள் வரை நடைபெற வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இயக்கம் திமுக என்பதால்தான் உள்ளாட்சித் தேர்தலை சட்ட நெறிமுறைகளின்படி நடத்துவதிலும், அதற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நல்குவதிலும், ஆர்வமும் அக்கறையும் காட்டி வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கறிவர்.

ஆட்சியில் இல்லாத காலகட்டத்திலும், ஊராட்சி மன்றங்களே இல்லாத நேரத்திலும், அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி, திரண்டு வந்த பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகளைக் கண்ட இயக்கம், திமுக என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால், அதிமுக ஆட்சியில் அது எம்ஜிஆர் தலைமையிலான ஆட்சியாக இருந்தாலும், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருந்தாலும், தற்போதைய அடிமை அரசாக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் சுணக்கமும், ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடுகளுமே வெளிப்பட்டு வருகின்றன.

மாநிலத் தேர்தல் ஆணையத்தை தனது கைப்பிள்ளையாக வைத்துக்கொண்டு, அடிமை அதிமுக அரசு நடத்துகிற ஜனநாயகப் படுகொலைகளை நீதிமன்றங்களே பல முறை தட்டிக் கேட்டிருக்கின்றன. அதனால்தான், 8-12-2019 அன்று நடைபெற்ற திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதனைத் தோலுரித்துக் காட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக நீதிமன்றத்தை நாடியது ஏன் என்பதற்கான தெளிவான விளக்கம் அந்தத் தீர்மானத்தில் இடம் பெற்றிருக்கிறது.

"தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முழுமையாக அதிமுக அரசிடம் சரணாகதி செய்து விட்டு முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் விருப்பத்திற்காக உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு அடுத்தடுத்து குழப்பங்களை அணிவகுக்க வைத்து மூன்று வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் பஞ்சாயத்து ராஜ் எனும் அடிப்படை ஜனநாயகக் கருத்தாக்கத்தைப் படுகொலை செய்திருக்கிறது என கண்டனத்தைப் பதிவு செய்த அந்தத் தீர்மானத்தில், திமுக மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கான காரணங்களும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் சட்டப் பிரிவு 9-ன்படி, 17.10.2016 மற்றும் 19.10.2016 அன்று நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு, தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருப்பதற்கு மாநிலத் தேர்தல் ஆணையமும், அதிமுக அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

26.9.2016 அன்று அவசரமாகத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அன்றே அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்தது. வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு கொள்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் செய்யப்பட்ட முறையற்ற தேர்தல் அறிவிப்பைச் சுட்டிக்காட்டி சட்டப்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடுத்தது.

திமுக தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பு ஆளுங்கட்சிக்கு மட்டும் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது; மற்ற அரசியல் கட்சிகளுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை, இட ஒதுக்கீடு செய்வதைத் தமிழக அரசு தாமதம் செய்துள்ளது, அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் களத்தில் சம வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்யவில்லை என்று பல்வேறு கண்டனக் கணைகளைத் தொடுத்து, அறிவுரைகளை வழங்கி, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து தெரிவித்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து 31.12.2016-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி, தமிழக தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்த முன்வரவில்லை.

2011 மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை முடிந்து விட்டது. 31.5.2019-க்குள் தேர்தலை நடத்துவோம் என்று மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் முன்பு 1.3.2019-ல் உறுதியளித்தது. அதனையும் காற்றில் பறக்கவிட்டு, மறுவரையறை தாமதம் ஆகிறது. 2019 செப்டம்பர் இறுதியில்தான் முடியும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியல் பெறுவதில் தாமதம் ஆகிறது, மக்களவைத் தேர்தலால் தேர்தலை நடத்த அதிகாரிகள் இல்லை என்றெல்லாம் இட்டுக்கட்டி, புதுப்புது காரணங்களையும் சமாதானங்களையும் தேடிக் கண்டுபிடித்து தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் முன்பு 2.7.2019 அன்று, பிரச்சினையையே திசை திருப்பும் வகையில் சொன்னதுடன், அக்டோபர் 2019-க்குள் தேர்தலை நடத்துவோம் என்று மாநில தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டது. ஆனாலும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இறுதியாக 18.11.2019 அன்று டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் அனைத்து சட்டவிதிகளையும் கடைப்பிடித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என நம்புகிறோம் என்று உச்ச நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்கியது. அப்படித்தான் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டது.

தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சி தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டிருந்தாலும் நேரடி தேர்தலுக்குப் பதில் மறைமுக தேர்தல் என அவசரச் சட்டம், 9 மாவட்டங்களை புதியதாக உருவாக்கி அங்கு இடஒதுக்கீடு, மறுவரையறை செய்யாதது, ஊரக ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் என்றெல்லாம் அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தின.

இந்தக் குழப்பங்கள் நீக்கப்பட்டு, ஜனநாயக நெறிமுறைகளின்படியும், அரசியல் சட்டம் உருவாக்கியுள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படியும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முறைப்படி நடத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், உச்ச நீதிமன்றத்தை திமுக அணுகியது.

அந்த வழக்கில், புதிய மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிக்குத் தடை விதித்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். வழக்கு விசாரணையின் போது, இப்போது ஏன் மாவட்டங்களைப் பிரித்தீர்கள்?, மூன்று மாவட்டங்களுக்கு எப்படி ஒரு மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் இருக்க முடியும்? ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்தானே இருக்க வேண்டும்?, சட்டபூர்வப் பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு, தேர்தல் வேண்டாம் என்று மனுதாரர் சொல்லவில்லை. உள்ளாட்சி தேர்தலை சட்டப்படி நடத்த வேண்டும் என்றுதான் மனுதாரர் சொல்கிறார் என்றெல்லாம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய ஆழமான கேள்விகளே, அதிமுக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் உள்நோக்கத்துடன் செயல்படுவதை, தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம், அம்பலப்படுத்தின.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், குளறுபடிகளைச் சரிசெய்யாமல், அதே தேர்தல் தேதியை மீண்டும் அறிவித்த நிலையில்தான், திமுக மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அந்த வழக்கில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுக்கின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது ஏதோ திமுகவுக்கு விழுந்த சம்மட்டி அடி என்பது போல நினைத்துக் கொண்டு ஓர் அமைச்சர் தள்ளாட்டத்தில் துள்ளாட்டம் போடுகிறார். கடந்த மூன்றாண்டுகாலமாக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மரண அடி வாங்கி, மாநிலத்தின் மானத்தை வாங்கியிருப்பது அதிமுக ஆட்சிதானே தவிர, திமுகவின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்ச நீதிமன்றம் பாராட்டவே செய்திருக்கிறது.

அதிமுக அரசு எத்தனை அத்துமீறல்கள் செய்திட நினைத்தாலும், மாநில தேர்தல் ஆணையத்துடன் சூழ்ச்சிகரமான கூட்டணி அமைத்துக்கொண்டு முறைகேடுகளுக்கு வழி வகுத்தாலும், மக்களின் பேராதரவு திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமே இருக்கிறது. அதிமுக ஆட்சியில் ஊராட்சிகள் எத்தகைய அவலட்சணத்தில் இருக்கின்றன என்பது ஊரறிந்த நாடறிந்த ஏடறிந்த ரகசியம்தான்.

திமுகவின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஊராட்சிகளில் மக்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றபோது, ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொட்டித் தீர்த்த கோபமும், திமுக மீது அவர்களுக்கு இருக்கிற கெட்டியான பற்றுதலும் மறக்க முடியாதது. தேர்தல் களத்திலும் அதுவே நிச்சயம் வெளிப்படும்.

அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் தேர்தலை நடத்திடத் துடிக்கும் அதிகார அடிமையான அதிமுக அரசுக்கு, தக்க பாடம் புகட்டிட தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எத்தனை கட்டமாக தேர்தலை நடத்தினாலும், அத்தனை கட்டத்திலும், அதிமுக அடையப்போவது தோல்விதான்; தோல்வி தவிர வேறல்ல. மக்கள் எழுதி வைத்திருக்கும் மகத்தான இந்தத் தீர்ப்பினை, திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் தெளிவாக உணர்ந்துகொண்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தை சந்தித்திட ஆக்கபூர்வமான வியூகம் வகுத்திட வேண்டும்.

கடந்த மூன்று நாட்களாக நான் மாவட்ட கழகச் செயலாளர்களிடம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தொடர்ந்து கலந்து பேசி வருகிறேன். இன்று காலை வரை, 11 மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் நமது கூட்டணிக் கட்சிகளுடன் பேசி உடன்பாடு ஏற்பட்டு, அதன் விளைவாக பட்டியலை தங்கள் மாவட்டக் கழகத்தின் மூலம் வெளியிட்டுவிட்டோம் என்ற சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன்.

மற்ற மாவட்டங்களும் தோழமைக் கட்சியினருடன் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையினை தொடர்ந்து மேற்கொண்டு, சுமுகமான உடன்பாடு கண்டிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். திமுகவின் சார்பில் போட்டியிடக்கூடிய இடங்களில், மக்கள் நலனில் மிகுந்த அக்கறையும் மேலான வெற்றிவாய்ப்பும் உள்ள, அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்திருக்கும் வேட்பாளர்களை களமிறக்கிட வேண்டும்.

திமுகவின் அடி முனையில் ஆர்வமுடன் காத்திருக்கும் தொண்டர்களையும் அரவணைத்து, தோழமைக் கட்சியினரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு வாக்காளரின் உறுதியான நம்பிக்கையையும் பெற்றிடும் வகையில் கண்ணும் கருத்துமாக உழைத்திட்டால்தான், வெற்றி நம் கைகளுக்கு வரும்.

நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் இனிப்பான வெற்றிப் பரிசும், இடைத்தேர்தல் களம் தந்துள்ள கசப்பான பாடமும் மறக்க முடியாதவை; மறக்கக் கூடாதவை. கடந்தகால வெற்றியாயினும் தோல்வியாயினும் அது தரும் படிப்பினைகளை நுணுக்கமாகக் கற்றறிந்து கொள்ள வேண்டும். அலட்சியம் துளியுமின்றி, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் முழுமையாகப் பெறுவதன் மூலம்தான், நம் வெற்றியின் இலக்கை அடைந்திட முடியும்.

சூதுமதியாளர்களாம் அதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும்போது, விரைவில் தமிழ்நாட்டில் அவர்களுக்கான நல்லாட்சி அமையப் போகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். என்றும் நாம் மக்கள் பக்கம் நிற்போம்; எல்லா இடங்களிலும் வெற்றிக் களம் காண்போம்! வீணர்தம் கொட்டம் அடக்குவோம்; விவேகமும் வேகமும் நிறைந்த பணியை விரைந்தாற்றுவோம்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x