Published : 14 Dec 2019 09:44 AM
Last Updated : 14 Dec 2019 09:44 AM

பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் பெருகி பறவைகளை ஈர்த்துள்ள வேய்ந்தான்குளம்

திருநெல்வேலியில் புதிய பேருந்து நிலையத்தையொட்டியுள்ள வேய்ந்தான்குளம் பொது மக்கள் பங்களிப்புடன் தூர்வாரப் பட்டதையடுத்து தற்போது தண்ணீர் பெருகி கடல்போல் காட்சியளிக்கிறது. குளத்தின் நடுவேயுள்ள மணல் திட்டுகளில் பல்வேறு வகையான பறவைகள் தஞ்சம் புகுந்துள்ளன.

திருநெல்வேலி மாநகரின் நிலத்தடி நீர்மட்டத்துக்கு முக்கிய ஆதாரமான இக்குளத்தின் ஒருபகுதியை மேடாக்கி புதிய பேருந்து நிலையம் அமைக் கப்பட்டுள்ளது. பேருந்து நிலை யத்தையொட்டியுள்ள பகுதியில் குளம் பாழ்பட்டிருந்தது.

குளம் முழுவதும் நீர்க்கருவை மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்திருந்தன. கரைகள் சீரமைக்கப்படாமல் தூர்ந்து போயி ருந்தன.

சுற்றிலுமுள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவு நீரும், புதிய பேருந்து நிலையத்தின் கழிவுகளும் சேகரமாகும் இடமாக இந்த குளம் உருமாறியது.

அத்துடன் மாநகரில் பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் எடுத்துவரப்படும் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை குளத்தின் கரையோரத்தில் கொட்டிவிட்டு சென்றனர். இதனால் குளம் குப்பை கிடங்காக மாறியது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தங்களது புகலிடமாக குளத்தை மாற்றினர். குளத்தில் தேங்கிய கழிவு நீரால் பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசியது. இதனால் பயணிகள் அவதியுற்றனர்.

தூர் வார நடவடிக்கை

இந்த குளத்தின் அவலநிலை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கொண்டு சென்றன. . கழிவுநீரும், குப்பைகளும் குளத்தில் சேகரமாவதால் சுற்றியுள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் பாழ்படும் நிலை உருவானது.

மேலும், குளத்தின் கரையோரங் கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவது குறித்து பலரும் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பருவமழைக்கு முன் இந்த குளத்தை பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தூர்வாரி செப்பனிட மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்தன. குளத்தை தூர் வாரும் பணி நடபெற்றது. அதில் வளர்ந்திருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டதுடன் கரைகள் பலப்படுத்ப்பட்டன.

பறவைகளை ஈர்த்தது

குளத்தின் நடுவே பறவைகள் தங்கி இளைப்பாறும் வகையில் மணல் திட்டுகள் உருவாக்கப் பட்டன. இதன் காரணமாக சமீபத்திய மழையில் இந்த குளத்து க்கு நீர்வரத்து அதிகரித்தது.

குளம் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. தண்ணீர் பெருகி கடல் போல் காணப்படும் இந்த குளம் உள்ளூர் பறவைகளையும், வலசைவரும் பறவைகளையும் ஈர்த்துள்ளது.

தற்போது குளத்தின் நடுவேயு ள்ள மணல் திட்டுகளில் மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகங்கள், பவளக்கால் உள்ளான், தாழைகோழி, கரண்டி வாயன் உள்ளிட்ட உள்ளூரை சேர்ந்த பல்வேறு பறவைகள் தஞ்சம் புகுந்துள்ளதாக பறவைகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

மாநகரில் நீர்நிலைகள் அருகிவரும் நிலையில் வேய்ந்தான்குளம் தண்ணீர் நிரம்பி பறவைகளின் புகலிடமாக திகழ்வது இயற்கை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக ‘நம் தாமிரபரணி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ். நல்லபெருமாள் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x