

சீமைக்கருவேல முள்செடிகள் அடர்ந்தும், துர்நாற்றம் வீசியும், பொதுக் கழிப்பிடமாக காணப்பட்ட தஞ்சாவூர் மாரிக்குளம் சுடுகாட்டை நந்தவனத்தைப் போல மாற்றும் முயற்சியில் அப்பகுதியினர் களம் இறங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 2-வது பெரிய சுடுகாடு மாரிக்குளம் சுடுகாடு, தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் தெற்கு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் வசிப்பவர்கள், நாஞ்சிக்கோட்டை, விளார், புதுப்பட்டிணம் ஆகிய ஊராட்சிகளில் வசிப்பவர்கள் யாரேனும் இறந்துவிட்டால், அவர் களது சடலத்தை எரிக்கவும், அடக்கம் செய்யவும் இந்த சுடுகாடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள மாரிக்குளம் சுடுகாடு 4 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள இந்த சுடுகாட்டின் உள்ளே இரு இடங்களில் தகன மேடையும், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்த 146 சமாதிகளும் உள்ளன.
இந்த சுடுகாடு சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, பொதுக் கழிப்பிடமாக மாறி, துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
மேலும், சுடுகாட்டின் உள்ளே சிலர் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால், சுடுகாட்டை சுற்றிலும் உள்ள குடியிருப்பில் வசிப்பவர்கள் அவதியடைந்து வந்தனர். இதை யடுத்து, மாரிக்குளம் சுடுகாடு சீரமைப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.
இக்குழுவினர் வாரந்தோறும் பல்வேறு சீரமைப்பு நடவடிக் கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மாரிக்குளம் சுடு காட்டை நந்தவனமாக மாற்றி வருகின்றனர். சுடுகாடு வளாகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, சமாதிகளை சுத்தம் செய்து, அதற்கு பல்வேறு வண்ணங்களை பூசி உள்ளனர். மேலும், தகன மேடைகள் சுத்தம் செய்யப்பட்டு, சுடுகாடு முழுவதும் மரக்கன்றுகள், செடிகள் நட்டுள்ளனர்.
இதுகுறித்து மாரிக்குளம் சுடுகாடு சீரமைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான காளையார் சரவணன் கூறியதாவது: நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மாரிக்குளம் சுடுகாட்டைச் சுற்றி, காலப்போக்கில் ஏராளமான குடியிருப்புகள் வந்துவிட்டன. ஆனால், சுடுகாட்டின் நிலைமை மட்டும் மாறாமல் இருந்தது. சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்பட்டது. இதை பொதுக்கழிப்பிடமாக பலர் பயன்படுத்தி வந்தனர். இதனால், இப்பகுதி முழுவதும் நாள்தோறும் துர்நாற்றம் வீசியது.
எனவே, அனைத்து கட்சியினர், சமூக அமைப்புகளை அழைத்து கூட்டம் நடத்தி, சுடுகாட்டை சீரமைக்க முடிவு செய்தோம். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரந்தோறும் தன்னார்வ அமைப்புகள் மூலம் பணிகள் செய்து வருகிறோம். சுடுகாட்டில் உள்ள சீமைக்கருவேல மரங் களை அகற்றி, அங்குள்ள சமாதிகளை சுத்தம் செய்து, அதில் பல வண்ணங்களை பூசி வைத்துள்ளோம்.
தொடர்ந்து சுடுகாட்டின் உள்ளே குப்பையை கொட்ட தடைவிதித்து, அங்குள்ள குளத்தை தூர் வார முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
மேலும், மரக்கன்றுகள், செடிகளை நட்டு, சுடுகாட்டை நந்தவனமாக மாற்றி வருகிறோம். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், நுழைவு வாயிலில் கதவுகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்த இந்த சுடுகாட்டை நந்தவனமாக மாற்றும் முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் தாமாக முன் வந்து ஒத்துழைப்பு தருகின்றனர் என்றார்.