Published : 14 Dec 2019 09:22 AM
Last Updated : 14 Dec 2019 09:22 AM

கோவை மத்திய சிறையில் காய்கறி உற்பத்தி தீவிரம்: சிறை பஜாரில் விற்பனை செய்யவும் திட்டம்

கோவை மத்திய சிறை வளாகத் தில் காய்கறி உற்பத்தி தீவிர மடைந்துள்ளது. காய்கறிகளை சிறை பஜாரில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் தடுப்பு பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற் பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய சிறை கட்டுப்பாட்டின் கீழ், ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறையும் உள்ளது. இதேபோல, சென்னை புழல், கோவை, சேலம், கடலூர், திருச்சி, சேலம், மதுரை, பாளையங்கோட்டை ஆகிய 8 மத்திய சிறைகளின் வளாகத்திலும் விவசாயப் பணிக்காக, சிறிய அளவிலான திறந்தவெளி சிறைச் சாலை அமைக்க கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகஅரசு உத்தர விட்டது.

அதன்படி, கோவை மத்திய சிறை வளாகத்தில், பெண்கள் சிறைக்கு பின்புறம் உள்ள காலியிடத்தை சீரமைத்து 5 ஏக்கரில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள சிறை நிர்வாகம் முடிவு செய்து, அதற் கான ஆயத்த பணிகளை மேற் கொண்டது.

இது தொடர்பான செய்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழில், கடந்த செப்டம்பர் 13-ம் தேதி வெளி யானது. இதை தொடர்ந்து காய்கறி கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கோவை மத்திய சிறை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் கூறும்போது,‘‘ விவசாயத்துக்காக ஏற்படுத்தப்பட்ட 5 ஏக்கரில், வெண்டைக் காய், கத்தரிக் காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், துவரை, முருங்கை மற்றும் பாகற்காய், புடலங்காய் போன்ற பந்தல் காய்கறிகள், அரசாணிக்காய், பூசணிக்காய் போன்ற கொடி வரைக் காய்றிகள் சாகுபடி செய்யப் படுகின்றன. முருங்கை மட்டும் ஓர் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. மேற்கண்ட காய்கறிகள் 2, 3 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யப்படுகின்றன. ஒருநாளைக்கு வெண்டைக்காய் 25 கிலோ, கத்தரி 20 கிலோ, கொத்தவரங்காய் 50 கிலோ, கீரை வகைகள் 10 கட்டுகளுக்கு மேல் அறுவடை செய்யப் படுகிறது. இதற்காக வாய்க்கால் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.

விவசாயப் பணியில் 24 கைதிகள்

மத்திய சிறைக் கண்காணிப் பாளர் கிருஷ்ணராஜ் கூறும்போது, ‘‘இங்கு நன்னடத்தை அடிப்படை யில் தேர்வு செய்யப்பட்ட 24 தண்டனை கைதிகள் விவசாயப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர் களுக்கு அதற்கான ஊதியம்வழங்க படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப் படும் காய்கறிகள், கைதிகளின் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிறை பஜாரில் காய்கறி களை விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

மீன் வளர்ப்பு மையம்

தற்போது விவசாயப் பணி மேற்கொள்ளப்படும் இடத்துக்கு அருகே, 75 சென்ட் பரப்பில் மீன் வளர்ப்பு மையம் அமைக்க தேவையான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 75 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இப்பணிகள் முடிந்த பின்னர் கட்லா, ரோகு, மத்தி, கெண்டை, திலேப்பியா போன்ற மீன்களை வாங்கி, இங்கு வளர்த்து விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x