அபார வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் எல்ஐசி மேலாண்மை இயக்குநர் சுஷீல்குமார் பெருமிதம்

டி.சி.சுஷீல்குமார்
டி.சி.சுஷீல்குமார்
Updated on
2 min read

மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) அபாரமான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது. இதன் வளர்ச்சி வீதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றார் அந்நிறுவனத்தின் அகில இந்திய மேலாண்மை இயக்குநர் டி.சி.சுஷீல்குமார்.

கோவையில் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் அவர் கூறிய தாவது:

கடந்த நிதியாண்டு முடியும் நிலையில் நாட்டின் மொத்த ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் 74 சதவீதம் எல்ஐசி மூலமாக எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல, பிரீமியம் வசூலில் 66 சதவீதம் எல்ஐசியின் பங்களிப்பாக இருந் தது. இதுவே தற்போது பிரீமியம் வசூல் 71 சதவீதமாக உயர்ந்துள் ளது. அதேசமயம் எல்ஐசி காப்பீட்டு பாலிசிகளின் வளர்ச்சியும் 76 சத வீதமாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, அக்டோபர், நவம்பர் மாதங்களில் எல்ஐசியின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. நவம்பர் மாதம் இந்தியாவில் எடுக்கப்பட்ட 40 லட்சம் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் 34 லட்சம் பாலிசிகள் எல்ஐசி நிறுவனம் மூலமாக எடுக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தற்போது 11.80 லட்சம் எல்ஐசி முகவர்கள் உள்ளனர். அண்மையில் ஒரு லட்சம் புதிய முகவர்களை நியமித் துள்ளோம். இவர்களில் 50 சதவீதம் பேர் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வர்கள். அவர்கள் இளவயதினரை எல்ஐசியை நோக்கி ஈர்ப்பார்கள். அதுமட்டுமல்ல, புதிதாக 5 ஆயிரம் வளர்ச்சி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மேலும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் முகவர்களை நியமித்து, உரிய பயிற்சி அளிப்பார்கள்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முகவர்களுக்கு இரு நாட்கள் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அதேபோல, ஏற்கெனவே உள்ள முகவர்களுக்கும் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பாலிசிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பாலிசிகள் எடுக்கப்பட் டுள்ளன. அவற்றில் 42 சதவீத பாலிசிகள் 30 வயதுக்கு உட்பட்ட வர்களால் எடுக்கப்பட்டுள்ளன. பொருளாதார மந்த நிலை சூழலிலும் எல்ஐசியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. பல ஆண்டுகளாக எல்ஐசியின் போனஸ் விகிதங் களை குறைக்காததும், இந்த வளர்ச் சிக்கு முக்கியக் காரணமாகும்.

அதுமட்டுமல்ல, பாதுகாப்பான முதலீடாக எல்ஐசி விளங்குவ தாலும், க்ளைம் செட்டில்மென்டுகள் சிறப்பாக இருப்பதாலும் எல்ஐசி மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உரிய தவணையில் பணம் செலுத்தாத எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு சலுகைகளும் வழங்கப் படுகின்றன. கடந்த 2 மாதங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் ஏறத்தாழ 22 லட்சம் பாலிசிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கை அடைவோம்

புதிய பாலிசிகளைப் பெறுவதில் எல்ஐசி அதிக கவனம் செலுத்தி வருகிறது. நடப்பாண்டில் 2.5 கோடி பாலிசிகளையும், ரூ.56,500 கோடி பிரீமியத் தொகை வசூலையும் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். நிச்சயம் இந்த இலக்கை அடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

தேசிய அளவில் 92 சதவீத பாலிசிகள் முகவர்கள் மூலம்தான் கிடைக்கின்றன. 4 சதவீதம் பாலிசி கள் வங்கிகள் மூலமும், மீதம் நேரடியாகவும் கிடைக்கின்றன. 120 கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 70 சதவீதம் பேரிடம்கூட ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் இல்லை. எல்ஐசியிடம் 29 கோடி வாடிக்கை யாளர்களும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களும் இருப்ப தாக வைத்துக்கொண்டால்கூட, இன்னும் பல கோடி பேர் ஆயுள் காப்பீட்டு பாலிசி இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

எனவே, மக்களுக்கு காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணரச் செய்ய, தொடர்ந்து விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

சிறிய அளவிலான பாலிசி திட்டமும் (மைக்ரோ) எல்ஐசியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் காப்பீட்டுத் தொகை யாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை மைக்ரோ பாலிசிகள் எடுக்கலாம். இதற்கு ஜிஎஸ்டி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஐசி மூலம் வசூலிக்கப்படும் பிரீமியத் தொகையில் குறிப்பிட்ட அளவு தொகையை மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்கிறோம். பொதுவாகவே, எல்ஐசியின் முதலீடுகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in