Published : 13 Dec 2019 10:05 PM
Last Updated : 13 Dec 2019 10:05 PM

உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் ‘குயின்’ இணையதள தொடரா?- தடைக்கேட்டு உயர் நீதிமன்றத்தில்  வழக்கு

உள்ளாட்சி தேர்தல் நடை பெற உள்ள நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை தொடரை சித்தரிக்கும் ‘குயின்’ இணையதள தொடர் வெளியிடுவது வாக்காளரை திசைத்திருப்பும் என் அதற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 27,30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது பொதுநல வழக்கு கோரிக்கை மனுவில், “ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து குயின் என்ற இணையதள தொடர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இணையதள தொடரை வெளியிட தடை விதிக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கபட்ட திரைப்படத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

தற்போது தேர்தல் நியாமாகவும், வெளிப்படை தன்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த ‘குயின்’ இணையதள தொடரிற்கு தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 9-ம் தேதி கோரிக்கை மனு அளித்திருக்கிறேன்.

அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து ‘குயின்’ இணையதள தொடர் வெளியிட தடைவிதிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்”. என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x