

தமிழக அரசு மக்கள் மன்றத்தில் கைகட்டி பதில் சொல்லும் நாள் வரும் என்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்தார். இதன் மூலம் மசோதா சட்டமாக மாறும். அதிகாரப்பூர்வ அறிவிக்கையின் படி அரசு கெசட்டில் டிசம்பர் 11-ம் தேதி வெளியிடப்பட்டதையடுத்து இந்தச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது.
இந்தச் சட்டத்தின் படி டிச.31, 2014 வரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், பவுத்தர்கள், கிறித்துவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும்.
இந்தச் சட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானது என, திமுக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி சார்பில் தமிழக முழுக்கப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் சென்னை சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது, குடியுரிமை சட்ட மசோதா நகலைக் கிழித்தெறிந்து உதயநிதி உள்ளிட்டோர், மத்திய அரசு, பாஜக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரைக் கண்டித்து முழக்கமிட்டனர். இதில் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து, உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
மாலையில் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் உதயநிதி ஸ்டாலின், "இஸ்லாமியர், ஈழத் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து இளைஞரணியின் சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகலைக் கிழித்தெறிந்து கைதானேன்.
மக்கள் போராட்டங்களைத் துப்பாக்கி குண்டுகளைக் கொண்டு ஒடுக்கும் அடிமை அரசிடம் இந்த கைது நடவடிக்கை என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் அடிமை ஆட்சியாளர்கள் மக்கள் மன்றத்தில் கைகட்டி பதில் சொல்லும் நாள் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.