

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பால் சப்ளை செய்துவிட்டுச் சென்ற வேனின் பின் சக்கரத்தில் தானாக படுத்து தற்கொலை செய்துகொண்டார் பக்தர் ஒருவர். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானாவைத்தாண்டி தமிழகத்திலிருந்து அதிக அளவில் பக்தர்கள் கூடுவது வழக்கம். திருப்பதியில் வெள்ளிக்கிழமை பூஜை விசேஷமானது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் திருப்பதி ஏழுமலையானுக்கு பால் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.
இதற்காக தேவஸ்தானத்துக்கு சொந்தமாக பசுக்களை வளர்க்கும் கோசாலையில் இருந்து பசும்பால் லாரியில் கொண்டு வரப்பட்டது. அபிஷேகத்திற்கு அந்தப்பாலை வழங்கியப்பின் அபிஷேகம் முடிந்து மீண்டும் பால் கேனை கோசாலைக்கு கொண்டுச் செல்வது வழக்கம். அவ்வாறு இன்று காலை சாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக வேனில் பால் கொண்டு வரப்பட்டது.
அபிஷேகத்திற்கு பிறகு காலி பால்கேன்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கோயிலிலிருந்து புறப்பட்டது வேன். அவ்வாறு செல்லும்போது கோயில் மாடவீதியில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் மொட்டை அடித்து, வேட்டி சட்டை அணிந்து வந்த பக்தர் ஒருவர் லாரி அவரை கடக்கும்போது லாரியின் முன்சக்கரம் சென்றவுடன் பின் சக்கரத்துக்கு இடைப்பட்ட இடத்தில் திடீரென கும்பிட்டப்படி சாஷ்டாங்கமாக படுத்துவிட்டார்.
லாரியில் இருந்த கிளீனர் இதைபார்த்து தடுக்க வருவதற்குள் லாரியின் பின்சக்கரம் அவர்மீது ஏறி இறங்கியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ந்துபோனார்கள். லாரிகிளினர் இறங்கி ஓடிவந்து அவரை வெளியே இழுக்கப்பார்த்தார். ஆனால் லாரி ஏறியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்துவிட்டார்.
திருப்பதி மலைமீது கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே அனைவர் கண்ணெதிரில் சாதாரணமாக நடந்த இச்சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் அந்த நபரின் உடலைக்கைப்பற்றி திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த நபருக்கு 45 வயதுக்குள் இருக்கும். ஆந்திர மக்களைப்போல் வேட்டி கட்டாமல் தமிழகத்தைச் சேர்ந்தவர்போல் வேட்டி அணிந்துள்ளதால் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த நபர் வருவதும், பால் லாரி மெதுவாகச்செல்வதும், லாரி தன்னை கடக்கும்போது கையெடுத்துக் கும்பிட்டப்படி லாரியின் பின் சக்கரத்தில் தலை வைத்து அந்த நபர் படுப்பதும், லாரி அவர்மீது ஏறி இறங்குவதும், மக்கள் அதைப்பார்த்து அதிர்ச்சி அடைவதும் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
மிகுந்த மன உளைச்சலுடன் திருப்பதிக்கு வந்த நபர் மொட்டை அடித்து சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்தவர் லாரி அவரை கடக்கும்போது திடீரென முடிவெடுத்து தனது முடிவைத் தேடிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
திருப்பதி கோயிலின் மாட வீதியில் பக்தர் ஒருவர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, தோஷ பரிகார பூஜை செய்யப்பட்டது.