

சாத்தூரில் சாலை விபத்தில் சிக்கி பலியான பட்டாசு தொழிலாளர்கள் 6 பேரது குடும்பத்தக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இ. குமாரலிங்கபுரம் கிராமத்தில் தனியார் பட்டாசு அலை ஒன்று இயங்கி வருகிறது.
இத் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த தொழிலாளர்கள் 15.7.2015 அன்று மாலை பணி முடித்து வீடு திரும்பும் போது, அவர்கள் சென்ற வாகனம் சிவகாசி வட்டம், விஸ்வநத்தம் கிராமம் உட்கடை, பாறைப்பட்டி கிராமத்தின் சாலை ஓரத்தில் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
டீசல் டேங் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில், வாகனத்தில் பயணம் செய்த கீழத்திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி காளியம்மாள், கருப்பையா என்பவரின் மனைவி இருளம்மாள், ஐசக் ராஜா என்பவரின் மனைவி பரமேஸ்வரி, முனியசாமி என்பவரின் மனைவி விஜயகுமாரி, குருசாமி என்பவரின் மனைவி கனகம் மற்றும் சிவகாசியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மனைவி முருகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இச்செய்தியை அறிந்து மிகவும் துயரமடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் எட்டு நபர்கள் தீக்காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.