

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் சட்டத் திருத்த மசோதா நகலை எரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உருவ பொம்மையை எரிக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த நிலையில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவைத் திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (டிச.13) புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென தாங்கள் கொண்டு வந்த சட்டத் திருத்த மசோதா நகலை எரித்துத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றபோது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.