

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டிடம் கடன் பெறுவது ஏன் என சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் ‘எய்ம்ஸ்’ அமைய உள்ள இடத்தையும், அந்த இடத்தைச் சுற்றி நடந்துவரும் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணியையும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பிறகு மதுரை மருத்துவக்கல்லூரியில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு கடன் வழங்கும் ஜப்பான் நாட்டுப் பிரதிநிதிகளுடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிச் சென்று ஓராண்டாகியும் ‘எய்ம்ஸ்’ கட்டுமானப்பணி தொடங்கப்படவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறுகிறது.
‘எய்ம்ஸ்’ அமைப்பதற்காக ஜப்பான் நிதிக்குழு ஒப்புதல் கிடைத்தவுடன் சுற்றுச்சுவருக்கு உள் பகுதியில் கட்டுமானப் பணிகள் துவங்கும்.
ஜப்பான் நிதிக்குழுவின் ஒத்துழைப்பு சிறந்த முறையில் உள்ளது. மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கும் பணிகள் அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவடையும். ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய சுகாதார துறை கேட்டிருந்த அளவு நிலத்தை மாநில சுகாதார துறை முழுமையாக ஒப்படைத்துவிட்டது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் காலிப்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பிற்காக விடுமுறையில் செல்வதால் அடிக்கடி காலிப்பணியிடம் ஏற்படுகிறது.
தமிழகத்தின் கூடுதலாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய 4 இடங்களில் மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெறும்.
அதன்பிறகு அதற்கான பணிகள் தொடங்கும். தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள ராமநாதபுரம், திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட 6 மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான நிதி ஒத்துக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பந்தம் விடப்பட்டு வருகிறது.
ஜனவரி முதல் வாரத்தில் ஒப்பந்த பணிகள் நிறைவடைந்து, இந்த 6 இடங்களில் மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கும். மதுரை மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ்
‘சீட்’கள் அதிகரிக்கப்பட்டநிலையில் அதற்கான கட்டமைப்புகள் வசதிகள் அமைக்கும் பணி நடக்கிறது. அதற்கு நாங்கள் இந்திய மருத்துவகவுன்சிலர் அனுமதியும் வாங்கிவிட்டதால் கூடுதல் ‘சீட்’களுக்கு எந்த பிரச்சனையும் வராது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் இந்தியாவில் மற்ற ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கி பணிகள் நடக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பான் நாட்டிடம் நிதி கடன் பெறப்படுகிறது. அதற்காக தமிழகத்தின் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பானிடம் கடன் வாங்க வேண்டும், அதனால்தான் நிதி ஒதுக்கீடும், கட்டமானப்பணியும் தாமதமாகுவதா கூறப்படுகிறதே? என்று கேட்டனர்.
அதற்கு பீலா ராஜேஷ், ‘‘ஜப்பானின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு கிடைத்தால் எய்ம்ஸ் கூடுதல் தரமானதாக அமையும் என்பதாலேயே ஜப்பான் நிதிக்குழுவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடன் பெறுவதற்காக மட்டுமே மத்திய அரசு ஜப்பான் உதவியை நாடவில்லை’’ என்று பதிலளித்தார்.