Published : 03 Aug 2015 10:04 AM
Last Updated : 03 Aug 2015 10:04 AM

தற்காப்புக் கலை ஒழுக்கத்தை ஏற்படுத்துகிறது: முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கருத்து

தற்காப்புக் கலை ஒழுக்கத்தை யும், சிந்தனை ஒருமுகப்படுத்து தலையும் ஏற்படுத்துகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கூறியுள்ளார்.

சர்வதேச அளவிலான பாதுகாப்பு நுன்சாக் தற்காப்புக் கலையின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. உலக நுன்சாக் தற்காப்பு கலை சங்கம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. நுன்சாக் அமைப்பின் கிராண்ட் மாஸ்டர் சோஷிஹன் எஸ்.கோதண்டன் வரவேற்புரை ஆற்றினார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகரன், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.லட்சுமணதாஸ், நடிகர் சுமன், எஸ்பிஓஏ பள்ளியின் முன்னாள் முதல்வர் எம்.பாலகிருஷ்ணன், கோகினோ ஷிடோர்யு கராத்தே பள்ளியின் தலைவர் டாக்டர் வி.எஸ்.விநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் பேசியதாவது:

தற்காப்புக் கலை என்பது ஒருவருக்கு ஒழுக்கத்தையும், சிந்தனை ஒருமுகப்படுத்துதலையும் ஏற்படுத்துகிறது. இக்கலை ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலாருக்கும் தேவைப்படுகிறது. இன்றைக்கு பெண்களை விட ஆண்கள் அதிகளவில் தங்க நகைகள் அணிகின்றனர். இரவில் அவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமெனில் தற்காப்புக் கலை தேவைப்படுகிறது. ஒருவர் நல்ல மனிதர் என பெயர் எடுக்க வேண்டுமானால் அவருக்கு ஒழுக்கம் வேண்டும். அதற்கு இந்தக் கலை உதவும்.

இவ்வாறு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கூறினார்.

நடிகர் சுமன் பேசும்போது, “நான் 15 வயதில் இருந்து கராத்தே, களரி உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பயின்று வருகிறேன். சினிமாத் துறைக்கு வந்து 38 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. தற்போது எனக்கு 56 வயதாகிறது. இன்னும் என்னால் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த தற்காப்புக் கலை பயிற்சிதான். நோய்கள் வராமல் தடுக்க இப்பயிற்சி உதவும். தமிழக அரசு தற்காப்புக் கலைக்கென ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ற சிறந்த நபர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x