

குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து இந்தியாவில் நடைபெற்று வரும் உள் விவாதம் குறித்து கருத்து தெரிவிப்பதை இதர நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனெய்ன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் மத்திய அரசின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பிரான்ஸ் அரசும் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் இம்மானுவேல் லெனெய்ன் புதுச்சேரி வந்தார். அவர் முதல்வர் நாராயணசாமியை புதுச்சேரி சட்டப்பேரவையில் மரியாதை நிமித்தமாக இன்று (டிச.13) சந்தித்துப் பேசினார்.
அதைத்தொடர்ந்து இம்மானுவேல் கூறியதாவது:
"இந்தியாவில் குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக நடைபெறும் விவாதம் எங்களுக்கு தெரியும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு அரசாங்கம் தலையிட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். அத்துடன் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் விஷயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவின் ஜனநாயக அமைப்பை பிரான்ஸ் மதிக்கிறது.
குறிப்பாக ஜம்மு காஷ்மீர் பிரச்சினை இயற்கையில் சிக்கலானது. இரு தரப்பு கலந்துரையாடல்கள் மூலமே தீர்க்க இயலும். பிரச்சினையை சர்வதேசமயமாக்குவதால் எந்த நன்மையும் இல்லை" என தெரிவித்தார்.