Published : 13 Dec 2019 02:12 PM
Last Updated : 13 Dec 2019 02:12 PM

சமஸ்கிருதத்துக்கு 3 பல்கலைக்கழகங்கள் அமைக்க மசோதா: வேல்முருகன் கண்டனம்

இல்லாத மொழியான சமஸ்கிருதத்திற்கு, 3 பல்கலைக்கழகங்கள் அமைக்க மசோதாவை முன்மொழிந்திருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருதத்தை பெரும்பாலானவர்கள் 'இறந்த மொழி' என்கின்றனர். இதில் ஒரு திருத்தம்: அதாவது 'இறந்த மொழி' என்றால் ஏற்கெனவே இருந்தது என்றாகிறது; ஆனால் அது எப்போதுமே இருந்ததில்லை; அதை மக்கள் யாரும் பேசியதில்லை; அதற்கு எழுத்தும் இருந்ததில்லை. வந்தவர்கள் தம் கற்பனையில் உருவாக்கியதுதான் சமஸ்கிருதம். எனவே அதனை 'இல்லாத மொழி' என்பதுதான் ஏற்புடையதாகும்.

குறிப்பிட்ட சமூகத்தினர் சமஸ்கிருதத்தை செம்மொழி என்பதும், ஆர்எஸ்எஸ்-பாஜக அதை இந்திய அடையாளம் என்பதாகச் சொல்லி, அதற்கென 3 பல்கலைக்கழகங்கள் அமைத்திட, அதுவும் ஒரே மசோதாவாகவே நாடாளுமன்ற மக்களவையில் முன்வைத்ததும் வேடிக்கை மற்றும் விநோதம்.

மக்களின் வரிப் பணத்தில் இந்த அடாத செயலை எப்படிச் செய்யலாம் மத்திய அரசு? இப்படி வந்தவர்களின் புனைசுருட்டான சமஸ்கிருதத்திற்கு 3 பல்கலைக்கழகங்கள் அமைத்திட இந்தியத் துணைக்கண்டத்தின் சொந்த மக்களது பணத்தைக் கரியாக்க மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

இது தொடர்பாக தமிழ்நாட்டின் எம்.பி. சு.வெங்கடேசன் மக்களவையில் பேசுகையில், "அமைச்சர் அறிவியல்பூர்வ ஆதாரங்களோடு இந்த மசோதாவை முன்மொழிந்திருக்க வேண்டும்; ஆனால் அவர் முன்வைத்த கருத்து அடிப்படை ஆதாரமே இல்லாதது" என்றார்.

மேலும் அவர், "சமஸ்கிருதம் தேவ பாஷை என்ற அவர்களின் நம்பிக்கையில் நான் குறுக்கிடவில்லை. ஆனால் எங்கள் தமிழ் தேவ பாஷை அல்ல; மக்களின் மொழி, மதச்சார்பற்ற மொழி, மதங்களும் மதங்களின் கடவுள்களும் உருவாக்கப்படுவதற்கு முன்பே செழித்தோங்கிய மொழி. இதுவே எங்களது பெருமை. கீழடி அகழாய்வும் கூட இதை நிரூபிக்கிறது" என்றார்.

"2,000 ஆண்டுகளுக்கு முன்பே 40-க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ்தான். சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் மக்கள் புழங்கும் மொழியாக இருந்ததில்லை; அது சடங்கில் உச்சரிக்கும் ஒலி வடிவம் அவ்வளவுதான். இன்றைக்கும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், கனடா, அமெரிக்கா என 140 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது. எனவே சமஸ்கிருதத்தை இந்தியப் பண்பாட்டின் இந்திய அறிவின் அடையாளமாக முன்வைக்காதீர்; அப்படி வைத்தால் அதை எதிர்க்கும் முதல் குரல் தமிழ்நாட்டின் குரலாகத்தான் இருக்கும்" என்றார்.

இந்தியப் பண்பாடு, அறிவு என்பது இந்த உலக மானுடப் பண்பாடு மற்றும் அறிவியலோடு உடன்படாதா என்பதுதான்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் வள்ளுவம்தான் உலக மானுட அறிவியல் பண்பாடு. பிறப்பால் மனிதருள் கீழ் சாதி, மேல் சாதி என்பது சமஸ்கிருதப் பண்பாடு. இந்தி பேசும் மாநிலங்களைத் தவிர உலகில் எங்கும் இல்லை இந்த சமஸ்கிருதப் பண்பாடு. ஆக சமஸ்கிருதமும் அதன் பண்பாடும் மானுடத்தையே சிறுமைப்படுத்துவது என்பதுதான் உண்மை.

ஆகவேதான் துணிந்து தெளிந்து மெய்ப்பொருள் உரைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இல்லாத மொழியான சமஸ்கிருதத்திற்கு, 3 பல்கலைக்கழகங்கள் அமைக்க அதையும் ஒரே மசோதாவாக முன்மொழிவதென்பது, உலகில் இதுவரை எங்குமே நடக்காத அடாத செயல்; இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல; அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பானது" என வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x