Published : 13 Dec 2019 01:13 PM
Last Updated : 13 Dec 2019 01:13 PM

கடன் உதவி உள்ளிட்ட உதவிகளைச் செய்து கரும்பு விவசாயிகளைக் காப்பாற்றுக: ஜி.கே.வாசன்

கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து கரும்பு விவசாயிகளையும், கரும்பு விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (டிச.13) வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் விவசாயம்தான் முதன்மையான, முக்கியமான தொழிலாக இருக்கின்ற காரணத்தால் கரும்பு விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. காரணம் இந்தியா முழுமையும் கரும்பு விவசாயம் சுமார் 54 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளது. குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டின் நவம்பர் மாத இறுதி வரையில் 40.69 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில் நடப்பாண்டில் 2019 இல் நவம்பர் மாதம் இறுதி வரை 18.85 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயத்தின் மூலம் 2018 – 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 331.61 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டில் 2019 – 2020 இல் 40 சதவீத அளவுக்கு சர்க்கரை உற்பத்தி குறைந்து 268 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டில் 2019 – 2020 இல் சர்க்கரை உற்பத்தி எந்த புள்ளி விவரங்களுடனும் ஒப்பிட முடியாத அளவுக்குப் பெருமளவு குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2011 – 2012 இல் 23 லட்சம் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி 2018 – 2019 இல் 8.50 லட்சம் டன்னாக பெருமளவு குறைந்துவிட்டது. அதாவது கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து விட்டது.

இப்படி சர்க்கரை உற்பத்தி குறைந்ததற்கு காரணம் கரும்பு சாகுபடி செய்யும் பரப்பும், விளைச்சலும் குறைந்து விட்டதுதான். கரும்பு சாகுபடி செய்வதற்கு விளைநிலங்களின் பரப்பளவு குறைந்து போனதற்குக் காரணம் தண்ணீர் பற்றாக்குறையும், வறட்சியும், பொருளாதரம் இல்லாததும், கடன் வசதி பெற முடியாததும் என்றாலும் கூட வெட்டிய கரும்புக்கு உரிய பணத்தை முழுமையாக கரும்பு ஆலைகள் இது வரையில் விவசாயிகளுக்குக் கொடுக்காதது தான்.

இப்படி பல்வேறு காரணங்களால் கரும்பு விவசாயத்தையே நம்பி தொழில் செய்த விவசாயிகளுக்கு லாபம் கிடைக்காமல் பெரும் நஷ்டத்திற்குத் தள்ளப்பட்டார்கள். இந்நிலையில் கரும்பு விவசாயிகளையும், கரும்பு விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் முதலில் கரும்பு விவசாயிகளுக்குச் சேர வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை அவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் லாபம் தரக்கூடிய வகையில் தொழில் நடைபெற கொள்கைகளை வகுத்து செயல்படுத்த வேண்டும். கரும்பு விவசாயத்தின் அவசியத்தை கவனத்தில் கொண்டு கரும்பு விவசாயத்திற்கு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து கரும்பு விவசாயிகளையும், கரும்பு விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x