Published : 13 Dec 2019 12:10 PM
Last Updated : 13 Dec 2019 12:10 PM

திருச்சி கிறிஸ்டோபர் கைது: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில்  கைது நடவடிக்கைகள் தீவிரம்

சிறார்களைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படத்தைப் பதிவேற்றியதாக திருச்சியில் கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருக்கும் பலரின் ஐபி முகவரிகள் பல மாவட்டங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன. இது தவிர சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கைது நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக உள்ளனர்.

ஆபாச வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பது, அதனைப் பரப்புவது, அதையொட்டி காணொலிகள் தயாரிப்பது என சமூக வலைதளம் மோசமான நிலையை நோக்கிச் செல்வதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என அரசுக்குப் பல கோரிக்கைகள் வந்தன.

நீதிமன்றங்களும் அதைச் சுட்டிக்காட்டின. ஆபாச வலைதளங்களில் குறிப்பாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் பெரிய பிரச்சினையாக மாறி வந்தது.

இதையடுத்து மத்திய அரசு 120-க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்களை முடக்கியது. ஆபாச வலைதளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியர்கள் அதிகம் என்கிற ஆய்வு முடிவும், தமிழகம் அதில் முன்னேறிய இடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சி செய்தியும் வெளியானது. குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதோ, தரவிறக்கம் செய்வதோ, அதை மற்றவர்களுக்குப் பகிர்வதோ கடுமையான குற்றமாகும்.

இவ்வாறு ஆபாசப் படம் பார்த்தவர்களின் பெரிய பட்டியலை ஐபி முகவரியுடன் அமெரிக்க உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்ப, அது தமிழக போலீஸாருக்கும் வந்தது. ஐபி முகவரியை வைத்து அதுபோன்ற செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இதில் முதல் கைதாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக திருச்சி காஜாப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் (42) என்ற இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடியோக்களைப் பதிவேற்றியதாக பல ஐ.பி. முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருச்சியில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் கடந்த 4 ஆண்டுகளாக 500 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆபாசப் படங்களைப் பகிர்ந்துள்ளது தெரியவந்தது. அவரது செல்போன், வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் அதிக அளவில் நெருக்கமாக இருந்த 30 பேரின் பட்டியலை முதற்கட்டமாக எடுத்து, அவர்களை போலீஸார் விசாரணைக்கு அழைக்க உள்ளனர்.

அதற்கு முன் அவர்களது ஐபி முகவரி மூலம் அவர்கள் பரிமாறிய, தரவிறக்கம் செய்த, பகிர்ந்த, பதிவு செய்த விவரங்களைச் சேகரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். இதுதவிர ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய தகவலின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட ஐபி முகவரிகளில் அதிக அளவிலான பகிர்வுகள், தரவிறக்கம் செய்தவர்களை முதற்கட்டமாக கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, கோவை, திருச்சி மாவட்டங்களே முதலிடம் வகிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் மேற்கண்ட மாவட்டங்களில் நடக்கலாம் எனத் தெரிகிறது. பதிவு செய்தவற்றைச் சேகரித்து வைத்தவற்றை அழித்தாலும் கைது நடவடிக்கையில் தப்ப முடியாது. காரணம் அனைத்தும் அவரவர் டிவைசில் மட்டும் சேகரிக்கப்படுவதில்லை. மற்ற இடங்களிலும் பதிவாகும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x