Published : 13 Dec 2019 11:19 AM
Last Updated : 13 Dec 2019 11:19 AM

நெல்லை பழைய பேருந்து நிலையத்தை ரூ.78.99 கோடியில் மறுகட்டமைக்கும் பணி ஓராண்டுக்குப்பின் தொடக்கம்

திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தை ரூ.78.99 கோடியில் மறுகட்டமைப்பு செய்து பொலிவுறு பேருந்து நிலையமாக்கும் திட்டப்பணி ஓராண்டு கழித்து மீண்டும் தொடங்கியுள்ளது. படம் மு. லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தை ரூ.78.99 கோடியில் மறுகட்டமைப்பு செய்து பொலிவுறு பேருந்து நிலையமாக்கும் திட்டப்பணி பல்வேறு தடைகளுக்குப்பின் ஓராண்டு கழித்து மீண்டும் தொடங்கியுள்ளது.

62 ஆண்டுகள் பழமையான இந்த பேருந்து நிலையம் 4.25 ஏக்கர் பரப்பில்அமைந்திருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த பேருந்து நிலையத்தை ரூ.78.99 கோடியில் மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்து கடந்த ஓராண்டுக்குமுன் பணிகள்தொடங்கப்பட்டன. இந்த பொலிவுறு பேருந்து நிலையத்தில் 144 கடைகளை உள்ளடக்கிய 3 அடுக்கு வணிக வளாகம் நவீன வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.

இந்தக் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.1.87 கோடி வருமானம் மாநகராட்சிக்கு கிடைக்கும். இந்த வணிக வளாகத்துக்கு கீழே தரைதளத்தில் 106 கார்கள் மற்றும் 1,629 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. பேருந்து நிலையத்தில் எக்காலத்திலும் தண்ணீர் தேங்காத அளவுக்கு வடிகால் வசதிகள் ரூ.55.98 லட்சத்தில் நவீன தரத்தில் உருவாக்கப்படவுள்ளது. அத்துடன் ரூ.21 லட்சத்தில்சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படுகிறது. மேலும் தானியங்கி படிக்கட்டுகள், அறிவிப்பு பலகைகள், துருப்பிடிக்காத இருக்கை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி, பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் அறிவிப்பு வசதி, சூரியமின்சக்தி, தொலைக்காட்சிகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஆண்டு இதே நாளில் மறுகட்டமைப்பு பணிகளுக்காக இப்பேருந்து நிலையத்தில் பழைய கட்டுமானங்களை இடிக்கும் பணி தொடங்கியது. இதையொட்டி பேருந்து நிலையத்தின் நுழைவாயில் மூடப்பட்டது. பேருந்து நிலையத்தின் தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்தம் அமைப்பதற்காக பெரிய அளவில் பள்ளம் தோண்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில் அங்குள்ள கடைகளை காலி செய்ய சிலர் மறுத்ததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. சிலர் நீதிமன்றம் சென்று தடையாணையும் வாங்கினர். இதனால் பணிகள் முடங்கின. தடைகளை நீக்க திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம்நீதிமன்றத்துக்கு சென்றது. இதனிடையேகடந்த சில வாரங்களாக திருநெல்வேலியில் பெய்த மழையால் ஏற்கெனவே பேருந்து நிலைய பகுதியில் தோண்டியிருந்த பள்ளத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது.

இச்சூழ்நிலையில் தற்போது தடைகள் நீக்கப்பட்டுள்ளதை அடுத்து ஓராண்டுக்குப்பின் மீண்டும் பணிகள் தொடங்கியிருப்பதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை 2 கட்டங்களாக மேற்கொண்டு 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதில் 12 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x