

டி.ஜி.ரகுபதி
கோவையில் இளம் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக, ‘போக்சோ’ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவது தீவிரமடைந்துள்ளது.
சமீப காலமாக இளம் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம், வசிப்பிடம் அருகே, பயணிக்கும் வாகனம் என பல்வேறு இடங்களில் வயது வித்தியாசமின்றி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுகின்றனர். பெரும்பாலும் தெரிந்த நபர்களாலேயே பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கோவை தடாகம் அருகே, 6 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் காளப் பட்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன், சீரநாயக்கன்பாளையத்தில் 6 பேர் கும்பலால் இளம் பெண் மற்றும் வெவ்வேறு இடங்களில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். இவ்வழக்கு களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்வது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 வயதுக்கு குறைவான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கைதாகும் நபர்கள் மீது ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்- POCSO)-வின் கீழ் வழக்கு பதிவு செய்யப் படுகிறது.
காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ கடந்த ஜனவரி முதல் தற்போது வரை கோவையில் 51, ஈரோட்டில் 69, நீலகிரியில் 25, திருப்பூரில் 36 என மொத்தம் 181 வழக்குகள் ‘போக்சோ’ சட்டப்பிரிவின் கீழ் பதியப்பட்டுள்ளன. இதில், கோவை யில் 15, ஈரோட்டில் 9, நீலகிரியில் 7, திருப்பூரில் 14 என 45 வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் 28, ஈரோட்டில் 47, நீலகிரியில் 10, திருப்பூரில் 20 என மொத்தம் 105 வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கோவையில் 23, ஈரோட்டில் 20, நீலகிரியில் 15, திருப்பூரில் 10 என 48 வழக்குகள் காவல்துறையினரின் விசாரணையில் உள்ளன.
மாநகர காவல் எல்லைக்குப்பட்ட பகுதியில் நடப்பாண்டில் தற்போது வரை ‘போக்சோ’ சட்டப்பிரிவின்கீழ் ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை விசாரிக்க மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. மாநகர காவல்துறையில் கூடுதல் துணை ஆணையர் தலைமையிலும், மாவட்ட காவல்துறையில் கூடுதல் எஸ்.பி தலைமையிலும் ‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்புப் பிரிவு’ உள்ளது. மானபங்கம், பாலியல் தொல்லை, சில்மிஷம், பலாத்காரம் போன்றவை தொடர்பாக பெறப்படும் புகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விசாரிக்கப் படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதுக்கு கீழே இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதியப்படுகிறது. பாலியல் குற்றங்களை தடுக்க தொடர் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.
‘‘மாறி வரும் பழக்கவழக்கம், செல்போன் பயன்பாடு அதிகரிப்பு, அறிமுகம் இல்லாத நபர்களுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக புகைப்படங்களை பரிமாற்றம் செய்தல், ஆபாச வீடியோக்களை பார்த்தல் போன்றவற்றின் விளை வாக பாலியல் ரீதியிலான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன’’ என்கின்றனர் சமூகஆர்வலர்கள்.
விழிப்புணர்வு
கோவை ‘சைல்டு லைன்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உமாதேவி கூறும்போது,‘‘பாலியல் சார்ந்த குற்றங்களை தடுக்க இளம் பெண்கள், சிறுமிகள், பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் உளவியல் ஆலோசகர் நியமிக்க வேண்டும். புகார் பெட்டி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இளம் பெண்கள், சிறுமிகள், குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தனிமையை விரும்பும் குழந்தைகள், சிறுமிகள், மகள்களிடம் பெற்றோர் இயல்பாக பேச்சுக் கொடுத்து, அவர்களது குறையை கேட்க வேண்டும். பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டால், பயப்படாமல் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்’’ என்றார்.
கோவை சரக டிஐஜி கார்த்திகேயன் கூறும்போது,‘‘ தொடர் விழிப்புணர்வு காரணமாக, பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி புகார் அளிக்கின்றனர். பாலியல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தயாரிக்க காவல் துறையினருக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது’’ என்றார்.