Published : 13 Dec 2019 10:40 AM
Last Updated : 13 Dec 2019 10:40 AM

சமஸ்கிருத வளர்ச்சிக்காக செலவிடும் தொகையில் நூற்றில் ஒரு பங்கை கூட தமிழுக்காக மத்திய அரசு செலவிடுவதில்லை: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகமாக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (டிச.13) வெளியிட்ட அறிக்கையில், "டெல்லி மற்றும் திருப்பதியில் செயல்பட்டு வரும் சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்துவதற்கான சட்ட முன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமஸ்கிருத கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டும் மத்திய அரசு, அதே ஆர்வத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழி கல்வி நிறுவனங்கள் மீது காட்டாதது தான் மிகவும் வருத்தமளிக்கிறது.

சமஸ்கிருதத்தை வளர்ப்பது மட்டுமின்றி, அம்மொழியில் அறிவியல் ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தப்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு மொழியை வளர்ப்பதற்காகவும், ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்காகவும் அம்மொழி சார்ந்த நிறுவனங்களை தரம் உயர்த்துவதை குறை கூற முடியாது. அதனால், மத்திய அரசின் இந்த முடிவை விமர்சிக்க பாமக விரும்பவில்லை. ஆனால், சமஸ்கிருத கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்துவதற்கான அளவீடு, மற்ற மொழி சார்ந்த கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்தும் விஷயத்தில் கடைபிடிக்கப்படாதது ஏன் என்பது தான் பாமக எழுப்ப விரும்பும் நியாயமான கேள்வி.

எந்த வகையில் ஒப்பிட்டுப் பார்த்தாலும் சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான செம்மொழியாகும். பல்வேறு பன்னாட்டு அரங்குகளில் இதை பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், சமஸ்கிருத வளர்ச்சிக்காக செலவிடும் தொகையில் நூற்றில் ஒரு பங்கை கூட தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசு செலவிடுவதில்லை என்பது தான் உண்மையாகும்.

செம்மொழி வளர்ச்சிக்காக இந்தியா முழுவதும் 18 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழுக்காக ஒரே ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தைக் கூட மத்திய அரசு நடத்தவில்லை. தமிழக அரசின் சார்பில் தமிழ் ஆராய்ச்சிக்காக ஒரே ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் மட்டும் தான் தஞ்சாவூரில் செயல்பட்டு வருகிறது.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக, செம்மொழி தமிழ் உயராய்வு மையம் ஏற்படுத்தப்பட்டு, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இயங்கி வந்தது. பின்னர் இது தரம் உயர்த்தப்பட்டு 2008 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி முதல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமாக சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு முழுமையான ஆதரவு வழங்கியிருந்தால் மிகப்பெரிய அளவில் தமிழ் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு, தமிழ் மொழி குறித்த பல வரலாற்று உண்மைகள் நிறுவப்பட்டிருக்கும்.

ஆனால், தமிழ் செம்மொழி மத்திய நிறுவனத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதற்கான முழுநேர இயக்குனர் கூட இன்னும் நியமிக்கப்படவில்லை என்பதிலிருந்தே, அதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை உணர முடியும்.

அடிப்படையில் பார்த்தால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு இணையான தகுதி கொண்டது தான். இப்போது 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தும் மத்திய அரசு, இரு ஆண்டுகளுக்கு முன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை என்ன செய்ய முயன்றது தெரியுமா? நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதி கொண்ட அந்த நிறுவனத்தை மூடி விட்டு, திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக மாற்ற திட்டமிட்டது. இதற்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தது பாமக தான். இத்திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து தான், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மூடப் போவதில்லை என மத்திய அரசு அறிவித்தது.

சமஸ்கிருதம் சார்ந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைக்கழகங்களாக உயர்த்துவதும், தமிழ் சார்ந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஓர் துறையாக சுருக்க முயல்வதும் ஏற்றுக் கொள்ள முடியாதவை ஆகும். ஆராய்ச்சி செய்வதற்கான அம்சங்கள் சமஸ்கிருதத்தை விட தமிழில் ஏராளமான உள்ளன. ஆராய்ச்சி செய்வதற்கான மாணவர்களும் தமிழில் தான் அதிகமாக உள்ளனர்.

எனவே, சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மத்திய தமிழ்ப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும். அத்துடன் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதன் வளாகங்களை அமைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x