தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டால் கடன் நெருக்கடி: மனைவி, 3 குழந்தைகளைக் கொன்று நகைத் தொழிலாளி தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட அருண் தன் மனைவி, குழந்தைகளுடன்
தற்கொலை செய்து கொண்ட அருண் தன் மனைவி, குழந்தைகளுடன்
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டால் 3 குழந்தைகள் மற்றும் மனைவிக்கு சயனைடு கொடுத்துக் கொன்றுவிட்டு நகைத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகர் பகுதியைச் சேர்ந்த நகைத் தொழிலாளி மாணிக்கம் என்பவரின் மகன் அருண் (33). இவரது மனைவி சிவகாமி (27). ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு தர்ஷினி (5), யுவஸ்ரீ (3), பாரதி (3 மாதங்கள்) ஆகிய குழந்தைகள் இருந்தனர்.

நகைத் தொழிலாளியான அருண் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தன் வீட்டை விற்று, வாங்கிய கடனை அடைத்துள்ளார். பின்னர் வாடகை வீட்டுக்குக் குடிவந்த அருண், மீண்டும் வேலைக்குச் செல்லும்போது தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கத் தொடங்கியுள்ளார். சிறு சிறு தொகை பரிசாக விழுந்ததால், வருமானத்தை விட கடன் வாங்கி லாட்டரி டிக்கெட் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் கடன் சுமை அதிகமானது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கத் தொடங்கியதும் அருள் நேற்று (டிச.12) நள்ளிரவு விபரீதமான முடிவை எடுத்துள்ளார்.

அதன்படி, நகைத் தொழிலில் ஈடுபடுவோருக்கு சுலபமாகக் கிடைக்கும் சயனைடை வாங்கி வந்து தன் மனைவியுடன் இணைந்து 3 குழந்தைகளுக்கும் கொடுத்துக் கொன்றார். அதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் தன் குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொன்றதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன் மனைவி சிவகாமியுடன் இணைந்து வெளியிட்ட வீடியோவில் அவர் கூறுகையில், "நண்பர்களே! உங்களிடம் நிறைய பாடம் கற்றுக்கொண்டேன். மனிதர்களிடம் நியாயம் தர்மம் இல்லை. விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி டிக்கெட்டை ஒழித்துவிடுங்கள். என்னைப் போல 10 பேர் பிழைத்துக்கொள்வார்கள். என் 3 குழந்தைகளும் இறந்துவிட்டன. இப்போது நானும் என் மனைவியும் சயனைடு சாப்பிட்டு சாகப் போகிறோம். நகைத் தொழில் செய்து வாழ முடியாது" என்று பேசி தன் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்ட அருணின் நண்பர்கள் நேற்று நள்ளிரவு அருணின் வீட்டை உடைத்து மயங்கிக் கிடந்த 3 குழந்தைகள் மற்றும் அருண் அவரது மனைவி சிவகாமி ஆகியோரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் ஏற்கெனவே 5 பேரும் இறந்துவிட்டனர் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து 5 பேரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அருணின் சகோதரர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in