Published : 13 Dec 2019 09:43 AM
Last Updated : 13 Dec 2019 09:43 AM

அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கு போலி சான்றிதழ் சமர்ப்பிப்பு?

அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்து பதவி உயர்வு பெற முயற்சித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் 8 வளாகக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் திருநெல்வேலி வளாகக் கல்லூரியில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்கள் சிலர், பதவி உயர்வு மூலம் 7-வது ஊதியக் குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊதியத்தைப் பெற முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதன்படி பதவி உயர்வுக்கு பேராசிரியர்கள், அதற்குரிய சான்றிதழ் படிப்புகளில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் உதவிப் பேராசிரியர்கள் சிலர், மும்பை ஐஐடி நிறுவனத்தின் சான்றிதழ் படிப்புகளில் தேர்ச்சி பெற்றதாக ஆவணங்களை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த ஆவணங்களில் சந்தேகமடைந்த நிர்வாக அதிகாரிகள் சிலர், மும்பை ஐஐடியிடம் தகவல் உரிமை சட்டத்தின்கீழ் சான்றிதழ் விவரங்களைக் கோரியுள்ளனர். ஆனால், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் யாரும் சான்று பெறவில்லை என பதில் வந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது வெளியான நிலையில் விரைவில் தவறிழைத்த பேராசிரியர்கள் மீது அண்ணா பல்கலை. உரிய நடவடிக்கை எடுக்கும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x