

உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் அரிய சிற்பங்களை பாதுகாக்கவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகவும் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம்,அர்ஜுனன் தபசு மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய இடங்களில் சிறப்பு ஒளிக்காட்சிகளுக்கு ஏற்பாடுசெய்ய வேண்டும். புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது. குப்பை போடுவது குற்றம் என அறிவித்து ரூ.1,000 வரை அபராதம் விதிக்கவேண்டும். குறிப்பாக சீன அதிபர்வருகையின்போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் துளிர்விடாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
இந்தக் கடிதத்தின் அடிப்படை யில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர். மேலும், மாமல்லபுரத்தின் அழகை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி,ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், வரும்ஜன.2-க்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்து வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.