Published : 12 Dec 2019 09:35 PM
Last Updated : 12 Dec 2019 09:35 PM

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: திருச்சி கிறிஸ்டோபர் சிக்கிய கதை; 4 ஆண்டுகளில் 500 பேருக்கு ஷேர்

சிறார்களைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைச் சேமித்துப் பலருக்கும் பகிர்ந்ததால் கிறிஸ்டோபர் என்கிற திருச்சி இளைஞர் கைதானார். ஆபாசப் படங்களுக்கு தான் அடிமையாகிவிட்டதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்டோருக்குப் பகிர்ந்ததாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆபாச வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பது, அதனைப் பரப்புவது, அதையொட்டி காணொலிகள் தயாரிப்பது என சமூக வலைதளம் மோசமான நிலையை நோக்கிச் செல்வதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என அரசுக்குப் பல கோரிக்கைகள் வந்தன.

நீதிமன்றங்களும் அதைச் சுட்டிக்காட்டின. ஆபாச வலைதளங்களில் குறிப்பாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் பெரிய பிரச்சினையாக மாறி வந்தது.

இதையடுத்து மத்திய அரசு 120-க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்களை முடக்கியது. ஆபாச வலைதளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியர்கள் அதிகம் என்கிற ஆய்வு முடிவும், தமிழகம் அதில் முன்னேறிய இடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சி செய்தியும் வெளியானது. குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதோ, தரவிறக்கம் செய்வதோ, அதை மற்றவர்களுக்குப் பகிர்வதோ கடுமையான குற்றமாகும்.

இவ்வாறு ஆபாசப் படம் பார்த்தவர்களின் பெரிய பட்டியலை ஐபி முகவரியுடன் அமெரிக்க உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்ப அது தமிழக போலீஸாருக்கும் வந்தது. ஐபி முகவரியை வைத்து அதுபோன்ற செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இதில் முதல் கைதாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக திருச்சி காஜாப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் (42) என்ற இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

அவர் வாட்ஸ் அப், முக நூல் மெசஞ்சரில் ஏராளமானோருக்குக் குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசக் காணொலியைப் பகிர்ந்துள்ளார். இந்தச் செயலை அவர் கடந்த 4 ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளார். ஐடிஐ ஏசி மெக்கானிசம் படித்துள்ள கிறிஸ்டோபர் நாகர்கோவிலில் பணியாற்றி வருகிறார்.

இன்று கைது செய்யப்பட்ட அவர்மீது 13, 14, 15 of POCSO Act r/w 67(A)(B)(b) of IT Act-2000- பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கன்டோன்மென்ட் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலின் கீழ் சிறையில் அடைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில் கிறிஸ்டோபர் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வந்த தாம் அந்த வேலையை விட்டுவிட்டு சமீபத்தில் திருச்சிக்கே வந்துவிட்டதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக முகநூலில் குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைத் தரவிறக்கம் செய்து அதை ஷேர் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஆதவன் ஆதவன் என்கிற பெயரில் முகநூலில் கணக்குத் தொடங்கி அதில் ஷேர் செய்ததாகவும் பின்னர் முகநூல் தனது கணக்கை முடக்கியதால் நிலவன் நிலவன் என்கிற பெயரில் முகநூல் கணக்குத் தொடங்கி தொடர்ந்து அதே வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேபோன்று தன்னுடைய செல்போன் எண்ணில் 2 வாட்ஸ் அப் குரூப்களைத் தொடங்கி அதில் சுமார் 500 பேருக்கு இதேபோன்று ஆபாசப் படங்களை ஷேர் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் குரூப்பில் உள்ள அனைவருக்கும் படம் சென்றாலும், அதை குரூப்பில் உள்ளவர்கள் எத்தனை பேர் கண்டித்தார்கள், எத்தனை பேர் மற்றவர்களுக்கு ஷேர் செய்தார்கள் என்கிற தகவலை போலீஸார் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் கிறிஸ்டோபர் தொடர்பில் இருந்த அதே மனநிலை கொண்ட மேலும் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

ஐபி முகவரியை எடுத்து, கைது செய்யும் படலத்தில் போலீஸார் இறங்கியவுடன் பயந்துபோய் முகநூலில் உள்ள அனைத்து ஆபாசப் படங்களையும் அழித்துள்ளார். ஆனால் அவரது சர்ச் ஹிஸ்டரி மூலம் போலீஸார் அனைத்தையும் எடுத்துவிட்டனர். அதேபோன்று அவரது செல்போனில் உள்ள குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களை எல்லாம அழித்துள்ளார். அவற்றைத் திரும்ப எடுப்பதற்கு போலீஸார் தடயவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர்.

கிறிஸ்டோபரை சிறையில் அடைத்த போலீஸார் கிறிஸ்டோபர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து தெரிவித்துள்ளனர். அதன்படி குழந்தைகளின் ஆபாசப் படத்தை வலைதளங்களில் வைத்திருப்பதும், பகிர்வதும், பதிவிடுவதும் IT Act-2000- 67(A)(B)(b) சட்டப்படி குற்றமாகும். இதற்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 வருட சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். மற்றும் POCSO Act r/w 13, 14, 15 -ன் படி 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

இணையதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்த ஆபாசப் படங்களைப் பதிவிட்டு சமூகச் சீர்கேட்டிற்கு வழிசெய்யும் இதுபோன்ற நபர்கள் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்பச் சட்டம் பாயும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x