Published : 12 Dec 2019 07:35 PM
Last Updated : 12 Dec 2019 07:35 PM

குப்பைகளைக் கொண்டு குட்டிக் குட்டி காடுகள் உருவாக்கும் திட்டம்: மதுரை மாநகராட்சியில் 64 இடங்களில் அமைகிறது

மதுரை மாநகராட்சியில் 62 இடங்களில் குப்பைகளை வைத்து குட்டிக் குட்டி ‘மியாவாக்கி’ காடுகளை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

குறைவான இடங்களில் அதிகமான மரங்களை வளர்த்து ‘குட்டிக்குட்டி’ காடுகளை உருவாக்கும் ஜப்பான் நாட்டின் மியாவாக்கி முறையில் உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பரிசோதனை முறையில் கடந்த சில மாதம் முன், கே.புதூர் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பூங்கா, மாநகராட்சி ஆணையாளர் முகாம் அலுவலகம் உள்பட 3 இடங்களில் மியாவாக்கி முறையில் மரங்கள் நடப்பட்டன. தற்போது இந்த மரங்கள், பெரும் மரங்களாக வளர்ந்து குட்டிக்காடுகள் போல் பசுமையாக மாறியுள்ளன.

மரங்களும், இந்த முறையில் வேகமாக வளர்ந்து நிழலுக்கு நிழலும், சுவாசிக்க சுத்தமான காற்றும் கொடுக்கிறது. இதையடுத்து, தற்போது மாநகராட்சி 100 வார்டுகளில் மேலும் 64 இடங்களில் ‘மியாவாக்கி’ குட்டிக்குட்டி காடுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் கூறியதாவது;

ஜப்பான் நாட்டைச் சர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி அந்நாட்டில் மரங்கள் அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர்வதற்கான புதிய மரம் வளர்ப்பு முறையை கண்டுபிடித்தார். ‘இடைவெளி இல்லாத அடர்காடு’ என்கிற இவரோட தத்துவப்படி குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்களை நடலாம். மரங்களும் வேமாக வளர்வதை அகிரா மியாவாக்கி நிரூபித்தார்.

இந்த முறையில் ஜப்பான் நாட்டில் 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு குட்டிக்கட்டி காடுகளை உருவாக்கி உள்ளார். அதனால், இவரது பெயரில் அவரது மரம் வளர்ப்பு முறைக்கு ‘மியாவாக்கி’ என்று பெயிரிடப்பட்டுள்ளது.

இந்த முறையில் மாநகராட்சி நட்ட மரங்கள் கைமேல் பலனை தந்துள்ளது. 64 இடங்களில் வளர்க்கப்படும் மரங்களுக்கு 41 இடங்களில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் இடங்களில் தயாரிக்கப்படும் உரங்களை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

மேலும், தற்போது அமைக்க உள்ள 64 இடங்களில் இந்த 41 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்கள் இருக்கும் பகுதியில் அமைக்க தேர்வு செய்துள்ளோம். குறைவான இடத்தில் நகர்பகுதியில் காடுகளை உருவாக்குவதோடு, குப்பைகளை வைத்தே வனத்தை உருவாக்கும் அற்புதமான திட்டமும் நிறைவேற்ற முடிகிறது.

தற்போது மியாவாக்கி காடுகளை உருவாக்க உள்ள இடங்களில் ஆழமான குழிகளை வெட்டி, அதில் குப்பைகளை போட்டு நெருக்கமாக மரச்சடிகளை நட உள்ளோம்.

இப்படி செய்வதால் குப்பைகளை முறையாக பயன்படுத்த முடிகிறது. குப்பைகளை பாதுகாப்பான முறையில் அழிக்கவும் முடிகிறது. மரங்களை நடுவு செய்வதற்கு தற்போதைய டிசம்பர் மாதம் சரியான தருணம் என்பதால் இந்த மியாவாக்கி காடுகள் திட்டத்தை விரைவாக செயல்படத்தும் திட்டத்தை தெடாங்கி உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x