

ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் உட்பட தமிழ்நாட்டிற்கான நபார்டு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம் விவரம்:
தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்காக சென்னை மண்டல நபார்டு வங்கி மூலம் மும்பை நபார்டு தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட திட்டங்கள், பிரேரணைகள் இதுவரை ஒப்புதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. நபார்டு மண்டல அலுவலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன மாநில அரசு திட்டங்களை மும்பை நபார்டு வங்கி தலைமையகம் அவ்வப்போது நிர்வாக குழுவை கூட்டி அனுமதி வழங்குவது நடைமுறை வழக்கமாகும்.
ஆனால் 2019 - 20 ஆம் நிதி ஆண்டில் நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை என்பதால் பல்வேறு திட்டங்களுக்கு நபார்டு தலைமையகத்தில் இருந்து அனுமதி கிடைக்கப் பெறாமல் உள்ளது.
தென்காசி மாவட்ட பகுதியில் ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் கிடப்பில் உள்ளது. சென்னை மண்டல நபார்டு அலுவலகத்தின் மூலம் கடந்த ஜூலை மாதத்தில் ரூ. 42 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்திற்கு அனுமதி கோரி அனுப்பப்பட்டும் மும்பை நபார்டு தலைமை அலுவலகத்தில் அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை.
ராமநதி- ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தால் தென்காசி வட்டத்தில் வறண்ட பகுதியில் உள்ள 14 பழைய குளங்கள் உட்பட புதிதாக 7 குளங்கள் பாசன நீர் பெறுவதோடு அந்த பகுதியில் உள்ள 9 கிராமங்களைச் சேர்ந்த 729 பாசனக் கிணறுகளில் நீர்மட்டம் உயர்வது மூலம் 4058.18 ஏக்கர் புதிதாக பாசனவசதி பெறக்கூடிய வாய்ப்பும் உருவாகும்.
எனவே மத்திய நிதியமைச்சர் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் உட்பட கிடப்பில் கிடக்கின்ற தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நபார்டு தலைமையகம் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி உரிய அனுமதியை வழங்கிட ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.