கலாமின் வங்கி இருப்பு எவ்வளவு?- உதவியாளர் பொன்ராஜ் தகவல்

கலாமின் வங்கி இருப்பு எவ்வளவு?- உதவியாளர் பொன்ராஜ் தகவல்
Updated on
1 min read

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சொத்துகள், அவரது கடைசி காலத்தில் அவரது வங்கி இருப்பு, கலாம் உயில் எழுதி வைத்திருந்தாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து கலாமின் உதவியாளர் பொன்ராஜ் `தி இந்து’விடம் கூறியதாவது:

கலாம் தன் சம்பாத்தியத்தில் வாங்கிய பெங்களூரு வீடு அவரது காலத்திலேயே விற்கப்பட்டுவிட்டது. தற்போது ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீடு கலாமுக்காக அவரது தந்தை ஜெயினுலாபுதீன் விட்டுச் சென்றது. அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் பொறுப்பில் கலாம் கொடுத்து விட்டார்.

கலாம் உயில் எழுதி வைத்தி ருந்தாரா? அவரது கடைசி காலத்தில் வங்கி இருப்பு எவ்வளவு என்பது குறித்து எனக்கு துல்லியமாகத் தெரியாது. கலாமுக்கு பென்ஷன் பணம் வந்து கொண்டிருந்தது. அப்துல் கலாம் எழுதிய புத்தகங்களுக்கு ராயல்டி வந்து கொண்டிருக்கிறது.

கலாமுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள்தான் அவருடைய ஒரே சொத்து. இந்த புத்தகங்கள் அனைத்தும் டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் உள்ளன. கலாம் டெல்லியில் தங்கியிருந்த ராஜாஜி மார்க் இல்லத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் கல்வி மையமாக்க வேண்டும் என்பதே கலாமின் உறவினர்கள், நண்பர்களின் விருப்பமாக உள்ளது.

ஏனென்றால் டெல்லியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஏற்ற இடம் கிடையாது. இதற்கு கலாமின் டெல்லி இல்லம் பொறுத்தமானதாக இருக்கும் என்றார் பொன்ராஜ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in