

முதலல்வரின் சாதனைகளை எடுத்துக்கூறி உள்ளாட்சி தேர்தலில் சாதனை படைப்போம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் உசிலம்பட்டி திருமங்கலம் ஆகிய தொகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு சம்மந்தமாக மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
இதில் பாஜக சார்பில் சசி ராமன் மகாலட்சுமி, மகா சுசீந்திரன் தேமுதிக சார்பில் கணபதி, அழகர்சாமி, பாலச்சந்திரன் மற்றும் வாசன் கட்சி சேர்ந்த நிர்வாகிகளும் பாமக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காகவே தியாக வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்தவர் ’புரட்சித்தலைவி அம்மா’.
அவரின் எண்ணப்படி ஒரு சிறப்பான ஆட்சியை இன்று தமிழகத்தில் முதல்வர் நடத்தி வருகிறார் அவருக்கு உறுதுணையாக துணை முதல்வர் இருந்து வருகிறார்.
இன்றைக்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் அதிமுக அரசைப் பார்த்து எந்தக் குறையும் கூற முடியவில்லை. அதனால்தான் ஏதாவது ஒரு பொய்யான கருத்தை நாள்தோறும் கூறி வருகின்றனர். ஆனால் மக்கள் அதை ஒருபோதும் நம்பவில்லை
இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன. அந்த மாநிலங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக தமிழகம் உள்ளது. தினமும் ஏதாவது சாதனையை முதல்வர் செய்து வருகிறார்
இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே போல் தமிழகத்தின் தனிநபர் வருமானம் தேசிய தனிநபர் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது
தமிழகத்தில் முன்பு 4.93 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி இன்றைக்கு 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு பின் தமிழகத்தில் அந்நிய முதலீடுகள் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது
அதுமட்டுமல்லாது கடந்த திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு கடுமையாக இருந்தது. ஆனால் இன்றைக்கு தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. மேலும் பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்று சமீபத்தில் வெளிவந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த 3 ஆண்டுகளில் 930 கோடி ரூபாய் அளவில் தமிழகத்தில் உள்ள 4,865 ஏரி கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்றைக்கு தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது
அதேபோல் கடந்த ஆண்டு தைத் திருநாளில் அனைத்து இல்லங்களும் மகிழ்ச்சி பெருகும் வண்ணம் பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசு முதலமைச்சர் வழங்கினார்
தற்போது இந்த தைத்திருநாளில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பொங்கல் தொகுப்புடன் 1000 ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்து அதனை துவக்கி வைத்துள்ளார். இதற்காக 2363 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்
இதுபோன்ற சாதனைத் திட்டங்களை அறிவித்து அதனை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கச் செய்து சாதனை படைத்து வருபவர் நமது முதல்வர். அவருக்கு உறுதுணையாக இருப்பவர் தான் நம் துணை முதல்வர்.
உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஆணைக்கிணங்க கூட்டணிக் கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்குவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது
ஆகவே நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் முதல்வரின் சாதனைகளை எடுத்துக்கூறி 100% வெற்றி பெற்று சாதனை படைப்போம்" என்று அவர் கூறினார்