Published : 12 Dec 2019 04:24 PM
Last Updated : 12 Dec 2019 04:24 PM

விஜய் பட ஷூட்டிங்கால் பார்வையற்றோர் பள்ளியில் மாணவர்களுக்கு இடையூறு?- அறிக்கை கேட்கும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் 

நடிகர் விஜய் படத்தின் ஷூட்டிங் பார்வையற்ற மாணவர்கள் பள்ளியில் நடத்தப்பட்டபோது, படப்பிடிப்புக் குழுவினரால் பார்வையற்ற மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. அதன் பேரில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு வட மாநிலங்களில் வேகமாக நடந்து வருகிறது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கும் பள்ளியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது.

முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்தாலும், படபிடிப்புக் குழுவினர் அவர்களது வாகனங்கள், படப்பிடிப்பு நேரத்தில் செய்த அமர்க்களங்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பார்வையற்ற மாணவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த செய்திகளும் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்த தகவல் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? படப்பிடிப்புக்கு எந்த வகையில் அனுமதி அளிக்கப்பட்டது? மாணவர்கள் படிப்பு, அவர்கள் வழக்கமான முறைக்கு இடையூறு ஏற்படாவண்ணம் படப்பிடிப்பு நடத்த உத்தரவாதம் பெற்று படப்பிடிப்பு நடத்தப்பட்டதா? என படப்பிடிப்பு நடந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார்.

தலைமை ஆசிரியர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையும், இனி வருங்காலங்களில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிப்பது போன்றவை குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x