Published : 12 Dec 2019 03:28 PM
Last Updated : 12 Dec 2019 03:28 PM

'தலைவி', 'குயின்' இரண்டுக்கும் தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் தொடராக இணையத்தில் வெளியிடப்படும் 'குயின்', மற்றும் 'தலைவி ' படத்துக்குத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் 'தலைவி' படத்துக்கும், 'குயின்' என்ற இணையதளத் தொடருக்கும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் மருமகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைத்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கணா ரணாவத் நடிக்கும் 'தலைவி' என்ற தமிழ்ப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் 'குயின்' என்ற இணையதள தமிழ்த் தொடரை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றார்.

இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் 'தலைவி', 'ஜெயா', 'குயின்' ஆகியவற்றைத் தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “திரைப்படத்தையும், இணையதளத் தொடரையும் பார்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும், படத்தைப் பார்த்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும்” என வாதிட்டார்.

இயக்குநர் விஜய் தரப்பில், '' 'தலைவி' திரைப்படம், 'தலைவி' என்ற பெயரில் வெளியான புத்தகத்தைத் தழுவி எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்தப் புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை. தீபா ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இணையதளத் தொடர் தயாரிக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில், ''மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் தயாரிக்கப்படவில்லை. 'குயின்' என்ற புத்தகத்தைத் தழுவியே எடுக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டிலேயே இணையதளத் தொடர் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, 25 கோடி ரூபாய் செலவில் தொடரைத் தயாரித்துள்ள நிலையில், விளம்பரத்துக்காக கடைசி நேரத்தில் தீபா வழக்குத் தொடர்ந்துள்ளார்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

தனது வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவுடன் இருந்ததாக மனுதாரர் கூறுவது பொய். 2002-ம் ஆண்டுக்குப் பின் ஜெயலலிதாவுடன் தொடர்பில் இல்லாத தீபா 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பின் தான் வந்துள்ளார். அதனால் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய தீபாவுக்கு அடிப்படை உரிமை இல்லை என வாதிடப்பட்டது. வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பளித்தார். ஏற்கெனவே கௌதம் வாசுதேவ் மேனன் தனது தொடரில் தீபா குறித்து எந்தப் பாத்திரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்ட அடிப்படையில் தொடருக்குத் தடை விதிக்க முடியாது. 'தலைவி' படத்தில் முழுக்க முழுக்க இது கற்பனைப் பாத்திரம் மட்டுமே என்று குறிப்பிடுவதால் அதற்கும் தடை விதிக்க முடியாது என்று கூறி, நீதிபதி வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்தார். இதன் மூலம் 'குயின்' இணையதளத் தொடரும், 'தலைவி' படமும் சிக்கலின்றி வெளியாக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x