வைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஆதிமூலம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
"வைகை நதி பூர்வீக ஆயக்கட்டின் இரண்டாம் பகுதி விரகனூர் மதகு முதல் பார்த்திபனூர் மதகு அணை வரை 87 கண்மாய்கள் வழியாக சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.

இந்த ஆண்டு நவ. 17 முதல் 20-ம் தேதி வரை வைகை அணையிலிருந்து 386 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திருப்புவனம், மானாமதுரை தாலுகாவில் 80 கண்மாய்களை சென்றடைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. நெல் சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்நிலையில் வைகை நதியில் இருந்து கிருதுமால் நிதி பாசன கண்மாய் நிலங்களுக்கு தண்ணீர் திறக்க டிச. 6-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை அணை நீரை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

விவசாய பணிகள் தொடங்கி நெல்சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் தேவைப்படும் நிலையில் கிருதுமால் நதி பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்தால் சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவர்.

எனவே கிருதுமால் நதிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க இடைக்கால தடை விதித்து, தண்ணீர் திறப்பு தொடர்பாக அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் குடிநீருக்காக உபரி நீர் மட்டுமே கிருதுமால் நதியில் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

மனுதாரர் தரப்பில், உபரி நீர் என்ற பெயரில் அணையின் இருப்பு நீர் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மனிதன் உயிர் வாழ தண்ணீர் அவசியமாகும். இதனால் குடிநீர் தேவைக்காக தண்ணீர் வழங்குவதற்கு தடை விதிக்க முடியாது என்றனர்.

மேலும், வைகை அணையிலிருந்து கிருதுமால் நதிக்கு திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை அரசு தரப்பு உறுதி செய்ய வேண்டும். இந்த மனு தொடர்பாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள், மதுரை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in