ரஜினி பிறந்த நாள்: இந்திய அளவில் முதலிடம் பிடித்த வாழ்த்து ஹேஷ்டேக்

ரஜினி பிறந்த நாள்: இந்திய அளவில் முதலிடம் பிடித்த வாழ்த்து ஹேஷ்டேக்
Updated on
1 min read

ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து சொல்லும் ஹேஷ்டேகுகளை உருவாக்கியுள்ளனர். அது இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்த நாள் அவரது ரசிகர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ரஜினிகாந்த் 1970களில் திரைக்கு வந்தார். 80களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

90களில் அப்போதைய அரசுடன் ஏற்பட்ட மோதல்போக்கில் 1996-ம் ஆண்டு அன்று அமைந்த திமுக, தமாகா கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்ததில் ஆட்சி மாற்றமே நிகழ்ந்தது. ரஜினி என்பவர் மக்கள் கவர்ந்த ஒரு நடிகர் என்பதைத் தாண்டி அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை அந்நிகழ்வு காட்டியது.

ஆனாலும் அதன் பின்னர் ஏனோ திரைப்படத்தில் கவனம் செலுத்துவதில் மட்டுமே ரஜினி கவனம் செலுத்தினார். அரசியல் ரீதியாக யாரையும் பகைக்காமல் அனைவருடனும் நட்பு ரீதியாக வலம் வந்த ரஜினி உச்ச நடிகரானார். தமிழகம் தாண்டி, இந்தியா தாண்டி, உலக அளவிலும் அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்.

1996-ல் அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன ரஜினி 2016 வரையிலும் வாய் திறக்காதபோதும் ரசிகர்கள் நம்பினர். இந்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி என்கிற 2 ஆளுமைகள் அரசியலில் இல்லாத நிலை வந்தபோது அதை நிரப்ப தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று அறிவித்தார் ரஜினி.

ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளாக நேரடி அரசியலுக்கு வராமல் படங்களில் நடித்து வருகிறார். அவர் சொன்னபடி 2021-ம் ஆண்டு அரசிலுக்கு வருவார், அதற்கு முன்னர் அரசியல் கட்சி தொடங்குவார் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே பெருகி வருகிறது. இதனால் இந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாள் சற்று ஆர்வத்துடன் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. 70 வயதில் கதாநாயகனாக எந்த நடிகரும் இந்த அளவுக்கு உச்சபட்சமாகக் கொண்டாடப்பட்டதில்லை.

இந்த ஆண்டு ரஜினி பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட இரண்டு ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. ரசிகர்கள் வாழ்த்துகள், அவர்களது கருத்துகளை இந்த ஹேஷ்டேக் மூலமாகவே வெளியிட்டு வருகின்றனர்.

ரசிகர்களால் ட்விட்டரில் உருவாக்கப்பட்ட #HBDThalaivarSuperstarRAJINI என்கிற ஹேஷ்டேக் 3.29 லட்சத்தைத் தாண்டி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் 1.05 லட்சத்தைத் தாண்டிச் செல்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in