

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி தெரிவித்துள்ளார். இப்போது, அவரிடம் போய், யார் ஆதரவு கேட்டார்கள் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கிண்டலாகக் கேள்வி எழுப்பினார்.
சிவகாசியில் தனியார் உடற் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தபின் சரத்குமார் அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் சில மாற்றங்களைச் செய்யலாம். அதுவே எனது விருப்பம். அதை நாங்கள் விரைவில் அறிக்கையாக வெளியிடுவோம். உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க திமுக பயப்படுவதால்தான் நீதிமன்றம் சென்றுள்ளது.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் நாங்கள் அழைக்கிறோம். நடிகர்களும் அரசியலுக்கு வரலாம். உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ரஜினி தெரிவித்துள்ளார். இப்போது, அவரிடம் போய் யார் ஆதரவு கேட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.