Published : 12 Dec 2019 11:44 AM
Last Updated : 12 Dec 2019 11:44 AM

மதுரை மாவட்ட உள்ளாட்சி தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் திமுக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை: இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டம்

மதுரை

மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வார்டுகள், வேட்பாளர்கள் குறித்து கூட்டணி கட்சியுடன் திமுக மாவட்டச் செயலாளர்கள் நடத்திவரும் பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாக 3 நாட்களாக மந்தமாக இருந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்த தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்ததும், தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டனர்.

ஒருபுறம் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்தபோதும், மறுபுறம் தேர்தல் பணியில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 3 நாட்களாக திமுக வேட்பாளர் தேர்வு குறித்து மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்கள் பி.மூர்த்தி, எம்.மணிமாறன் ஆகியோர் ஊராட்சி கிளை செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஒன்றிய வார்டு, மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக நிர்வாகிகள் பேச்சு நடத்தினர்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது:

கூட்டணி கட்சிக்கு இத்தனை சதவீத இடம் என எந்த கட்டுப்பாடும் இல்லை. கூட்டணியினர் வெற்றி பெற வாய்ப்புள்ள வார்டுகளையும், வேட்பாளர் விவரங்களையும் தெரிவிக்கும்படி கூறியுள்ளோம். அவர்கள் அளித்த பட்டியலை வைத்து திமுக நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது.

இதில், கூட்டணி கட்சிகள் உறுதியாக வெற்றி பெற முடியும் என்ற நிலையில் உள்ள வார்டுகளை மட்டும் அவர்களுக்கு ஒதுக்கவும், மற்ற வார்டுகளில் திமுகவே போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டணி கட்சியினரும் எங்கள் நிலைப் பாட்டை ஏற்றுக்கொண்டனர்.

இது தொடர்பான இறுதி முடிவு நாளை (இன்று) எட்டப்பட்டதும், வேட்பாளர்கள் பட்டியல் தயாராகிவிடும். கட்சி தலைமையின் ஒப்புதல் பெற்று, வெள்ளிக்கிழமை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x