Published : 12 Dec 2019 11:18 AM
Last Updated : 12 Dec 2019 11:18 AM

தொப்புள் கொடி உறவுகள் கைவிட்டதால் பரிதவித்த தாய்: கோட்டாட்சியர் எச்சரிக்கையால் பராமரிக்க முன் வந்த மகன்கள்

சொத்துகளைப் பெற்றுக் கொண்டு தாயை கவனிக்காத மகன்களின், சொத்துகளைப் பறிமுதல் செய்வதாக கோட்டாட்சியர் எச்சரித்ததால், தாயைப் பராமரிக்க மகன்கள் முன்வந்தனர்.

நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பெங்கால் மட்டம், கோத்தி பென் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ருக்கியம்மாள் (82). இவருக்கு ரவி, சுரேஷ், ரமேஷ் என்ற மகன்களும், பேபி, சரோஜா உட்பட 4 மகள்களும் உள்ளனர். கணவன் இறந்துவிட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் தனது பெயரில் இருந்த 18 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை தலா 6 ஏக்கர் வீதம் மூன்று மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார். சொத்தை பெற்றுக் கொண்ட மகன்கள் ருக்கியம்மாளை கவனிக்காமல் விட்டுவிட்டனர்.

ஏமாற்றமடைந்த அவர், உதகை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷிடம் புகார் அளித்தார். இதையடுத்து குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாயை பராமரிக்காவிட்டால் அவர் பிரித்துக் கொடுத்த சொத்துகள் திரும்பப் பெறப்படும் என கோட்டாட்சியர் எச்சரித்தார். இதையடுத்து தாயை பராமரிக்க ஒத்துக்கொள்வதாக, மகன்கள் உறுதியளித்தனர்.

கோட்டாட்சியர் சுரேஷ் கூறும்போது, ‘‘ருக்கியம்மாளுக்கு பராமரிப்புச் செலவாக தலா ஒரு லட்சம் ரூபாய் தருவதாக அவர்களது மகன்கள் தெரிவித்துள்ளனர். பேபி என்ற மகள், தாயை தானே கவனிப்பதாக உறுதியளித்துள்ளார். மூதாட்டி ருக்கியம்மாளை பராமரிக்கத் தவறும்பட்சத்தில் மூன்று மகன்களும் தலா மாதம் ரூ. 4000 தர வேண்டும். தவறினால் மூன்று பேரின் நில உரிமையை ரத்து செய்து, மூதாட்டி ருக்கியம்மாளிடமே நிலம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x